
விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் கூறவில்லை. பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில் பிஹார், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் முகவரி ‘தலைவர், பாமக, எண் – 10, திலக் தெரு, தி.நகர், சென்னை – 17’ என உள்ளது. பாமக அலுவலக முகவரி மாற்றம் ராமதாஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் நிரந்தர முகவரி ‘63 நாட்டுமுத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை, சென்னை’ என்பதுதான். சூழ்ச்சியால் பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது பாமக தலைவருக்குத்தான். ஆனால், தேனாம்பேட்டைக்கு கடிதம் போகாமல், திலக் தெருவுக்கு சென்றுள்ளது.