
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த உரையாடல் பற்றி, “நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓர் அற்புதமான உரையாடல் நிகழ்ந்தது.” என்று சிலாகித்துள்ளார். இது, 50% இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் சிதைந்திருந்த இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் வாழ்த்தியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்புக்கும், எனது 75வது பிறந்தநாளில் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களைப் போலவே, இந்தியா -அமெரிக்கா மற்றும் உலகளாவிய நல்லுறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் உறுதியாக உள்ளேன். உக்ரைன் மோதலில் அமைதியான தீர்வுக்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.