
Doctor Vikatan: என் வயது 26. கடந்த சில வருடங்களாக எனக்கு கழுத்தைச் சுற்றி கருமையான படலம் இருக்கிறது. நான் அது சருமம் தொடர்பான பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது நீரிழிவின் அறிகுறியாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
இது உண்மையா, கழுத்தில் ஏற்பட்ட கருமைக்கு என்ன காரணமாக இருக்கும், என்ன தீர்வு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
கழுத்தில் கரும்படலம் ஏற்படும் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம்.
கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படுவதாகவும், அழுக்கு என்றும் நினைத்துக்கொண்டு மிகவும் ஆக்ரோஷமாகத் தேய்த்துக கழுவுவதையெல்லாம் செய்கிறார்கள்.
சிலருக்கு கழுத்து மட்டுமன்றி, முழங்கை மூட்டுகள், கால் மூட்டுகள், முகம், நெற்றி போன்ற இடங்களிலும் கரும்படலம் வரலாம்.
கழுத்தில் ஏற்படும் இந்தக் கருமை பிரச்னைக்கான காரணம், அழுக்கோ, சங்கிலி அணிவதோ இல்லை. சருமம் தடித்துப் போவதுதான் காரணம். இதை ‘அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ்’ (Acanthosis nigricans) என்று சொல்வோம்.
சருமம் தடிமன் ஆவதால் அந்தப் பகுதியில் நிறமும் மாறுகிறது. சிலருக்கு இது ‘ப்ரீ டயாபட்டீஸ்’ எனப்படும் நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, நீங்கள் சர்க்கரைநோய்க்கான பரிசோதனையைச் செய்துபார்த்து இதை உறுதிசெய்துகொள்ளலாம்.
அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம்.

புறத்தோற்றம் சம்பந்தப்பட்டது என்பதால், சரும மருத்துவரை அணுகி, இதற்கான க்ரீம் மற்றும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும்படி பலரும் கேட்பதுண்டு.
ஆனால், அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுகளைச் சாப்பிடும்போதும், அதிகப்படியான எடையைக் குறைக்கும்போதும் இந்த பாதிப்பு குறைவதையும் கழுத்தின் நிறம் மாறுவதையும் பார்க்கலாம்.
பெரியவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். நீரிழிவு, உடல் பருமன் போன்ற எதுவும் காரணமில்லை என்ற பட்சத்தில், சரும மருத்துவர், இந்தப் பிரச்னைக்கு வேறு சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.