
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையேயான போரில் இதுவரை காஸா பகுதியில் லான்செட் இதழின் ஆய்வின்படி 70,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள்.
அவர்களில் 59.1% பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள். 1,64,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்ட கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
அதனால், இஸ்ரேலுக்கான ஆதரவு போக்கிலிருந்து கத்தாரும் திரும்பியிருக்கிறது. ஐ.நா-வில் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக பேசத் தொடங்கியிருக்கின்றன.
காஸாவில் நடக்கும் அத்துமீறல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென, ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கிற்கு எதிராக, ஐ.நா ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தனர்.
மற்றொரு புறம், இஸ்ரேல் பசியையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐ.நா-வில் ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்திருந்தது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் மீதான அதிருப்தி வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் நேற்று மீண்டும் காஸா மீது தரை வழி, வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை நோக்கி போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் வசிக்கும் மக்கள் கூட இந்தத் தாக்குதல்களின் அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் பிணைக் கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினர் பிரதமர் நெதன்யாகுவின் ஜெருசலேம் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தரைவழித் தாக்குதல் தங்களின் அன்புக்குரியவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
அதனால் இஸ்ரேல் பிரதமரின் செயலுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்யும் அவர்கள், பிரதமர் இல்லத்துக்கு முன்பே டென்ட் அமைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.
சொந்த நாட்டிலேயே தனக்கான ஆதரவு மனநிலை சரிந்து வருவதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சிக்கல் கூடியிருக்கிறது.