
கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து வந்தார்.
அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் விதித்த கடைசி நாளான நேற்று அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, “கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் முடிவு கட்டப்படும். எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம்” என்று கூறிவிட்டு இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு காலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தம்பிதுரை, இன்பதுரை ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து, அவர்கள் மாலை 4 மணிக்கு மதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பதாகத் திட்டமிருந்தது.
பின்னர், அந்த சந்திப்பு இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சரியாக 8 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
முதல் அரை மணிநேர சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் வந்த நிர்வாகிகள் அங்கிருந்து தனியாக காரில் புறப்பட்டனர்.
அதன் பின்னர் 20 நிமிடங்களுக்கு மேல் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் தனியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அமித் ஷாவை சந்திக்க வரும்போது, தமிழ்நாடு அரசு இல்லத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இனோவா காரில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி, அவரை தனியாகச் சந்தித்து விட்டு வெளியே வரும் பொழுது பென்ட்லீ ரக காரில் தனியாக வெளியே வந்தார்.
அப்படி வெளியே வரும்போது அவர் ஊடகங்களிடம் முகத்தைக் காட்டக் கூடாது என்பது போலவும், முகத்தைத் துடைப்பது போலவும் வெள்ளை கைக்குட்டையை வைத்து முகத்தை மூடிய படியே வந்தார்.

அமித் ஷாவுடனான இந்த சந்திப்பில், அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தலையிட வேண்டாம் என்றும், அ.தி.மு.க அதிருப்தி தலைவர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பா.ஜ.க-வின் உட்கட்சி விவகாரங்களில் குறிப்பாக அண்ணாமலைக்கு எதிராக பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.
அதேபோல், செங்கோட்டையனை நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டத்தில் ஒருவராகத்தான் பார்த்ததாகவும், அ.தி.மு.க விவகாரங்களில் தான் தலையிட விரும்பவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.