
காவல் நிலையங்களில் பயன்படாத CCTV கேமராக்களை கண்காணிப்பதற்காக முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு கேமராவை அணைத்துவிடுவது அல்லது பதிவுகளை அழித்துவிடுவது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்தகைய அமைப்பு அவசியம் எனக் கூறியுள்ளனர்.
முந்தைய உத்தரவுகளின் படி சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், மாநில அதிகாரிகள் பின்பற்றுவதாகக் கூறி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தாலும்கூட, இந்த பிரச்னைகள் தொடர்கின்றன என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“நாங்கள் சிந்திப்பது மனித தலையீடு இல்லாத ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பற்றி, அதில் அனைத்து கேமராக்களிலிருந்தும் ஒளிபரப்புகள் நேரடியாக வழங்கப்படும். ஏதேனும் ஒரு கேமரா செயலிழந்தால் உடனடியாக எச்சரிக்கை வரும். இந்த பிரச்னையை சமாளிக்கக் கூடிய வழி இதுதான். இதற்கு வேறு வழியில்லை” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஒரு சுயாதீன நிறுவனத்தால் காவல் நிலையங்களில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் எனக் கூறிய நீதிமன்றம், “நாங்கள் சில ஐ.ஐ.டி.களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, ஒவ்வொரு CCTV-யும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கண்காணிக்கப்பட்டு, அந்த கண்காணிப்பு மனிதரால் அல்லாமல், முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் நடக்கும்படி ஒரு மென்பொருளை உருவாக்கச் சொல்லலாம்” என்றுள்ளனர்.
சிசிடிவிகள் செயல்படாமல் போகும்பட்சத்தில் அதை உடனடியாக பழுதுபார்க்க எச்சரிக்கைவிடுக்கும் வகையில் இது உருவாக்கப்படும் என்றுள்ளனர்.