
காளையார் கோவில்! சரித்திரப் பிரசித்திபெற்ற இந்த ஊரின் பெயரைக் கேட்டதுமே, வீரமும் தியாகமும் செறிந்த மருதுபாண்டியரின் வாழ்க்கைச் சரிதம் நம் நினைவுக்கு வரும்.
சிவகங்கையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலுள்ள இந்தக் கோயிலின் மீதும், இறைவன் மீதும் மருது சகோதரர்கள் கொண்டிருந்த பற்றையும் பக்தியையும் பலவாறு விவரிக்கிறது சரித்திரம். இத்தகு அற்புதமான காளையார் கோவிலை, மருது சகோதரருக்கும் வெகு முந்தைய காலத்தில் வீரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அந்த மன்னனுடன் தொடர்புடைய கதை ஒன்று, வேறோரு சிவாலயம் அமைந்த சரிதத்தை விவரிக்கிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது கோவிலூர் திருமடம். இங்கு சிற்பக் களஞ்சியமாக அமைந்திருக்கும் ஸ்ரீகொற்றவாளீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது!
மன்னன் வீரபாண்டியன் சிறந்த சிவபக்தன். எவராலும் வெல்ல முடியாத வீரவாள் ஒன்றை அவனுக்கு அளித்திருந்தார் சிவபிரான். அந்த மன்னன் ஒருமுறை சமிவனம் எனும் பகுதிக்கு வேட்டைக்குச் சென்றான். அதே தருணம், அவனது மேன்மையை உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவப்பரம்பொருள். அவனிடமிருந்த வீரவாளை மறையும்படிச் செய்தார். அந்தத் தருணத்தில் மறையவர் ஒருவரின் அபயக்குரல் மன்னனின் செவிகளில் கேட்டது.

குரல் வந்த திசை நோக்கிப் புரவியைச் செலுத்தினான் வீரபாண்டியன். அங்கே புலி ஒன்று மறையவரைத் தாக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. வீரபாண்டியனின் கை வீரவாளைத் தேடியது. அப்போதுதான் தன்னிடம் வீரவாள் இல்லை என்பதை அறிந்தான் மன்னன்.
வேறு ஆயுதங்களும் இல்லை. வேறு வழி இல்லாத நிலையில், வேங்கைக்கும் மறையவருக்கும் இடையே பாய்ந்தான். வேங்கை நிதானித்தது. அது தன்னைக் கொன்றுப் புசிக்கட்டும், மறையவர் தப்பித்துக்கொள்வார் என்று எண்ணினான் மன்னன். ஆனால் வேங்கை விடுவதாக இல்லை. ஆகவே, அதனுடன் போராடித் தன் உயிரைத் தரவும் துணிந்தான் வீரபாண்டியன்.
சட்டென ஒரு கணத்தில் வேங்கை மறைந்துபோக, மன்னனுக்கு சிவதரிசனம் கிடைத்தது. மன்னன் பணிந்து வணங்கினான். அவனுக்குத் திருவருள் புரிந்த சிவனார், வீரவாளையும் மீண்டும் கொடுத்தருளி மறைந்தார். மன்னன் வீரபாண்டியன் மகிழ்ந்தான். தனக்கு சிவதரிசனம் கிடைத்த அந்தச் சமிவனத்தைத் திருத்தி, சிவனாருக்கு ஆலயம் அமைத்து, `கொற்றவாளீஸ்வரர்’ என்று திருப்பெயர் சூட்டி வழிபட்டான்.

இப்படி ஆதியில் பாண்டியனால் உருவான ஆலயத்தைப் புதுப்பித்து, கவினுறச் செய்தது கோவிலூர் திருமடம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அழகுற புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆலயத்தின் திருப்பணிகள், கோவிலூர் மடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீமுத்துராமலிங்க ஞானதேசிக சுவாமிகளின் காலம் தொடங்கிப் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றுவந்தனவாம்.
அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் அம்பிகையின் திருப்பெயர், `திருநெல்லை நாயகி.’ `அருள்மிகு திருபுவனேசை’ என்ற திருப்பெயரும் உண்டு.
இந்த ஊரில் வசித்த சிவகுப்தனின் மகள் அரதனவல்லி. இவள் தங்களின் வயலைக் காவல் காக்கச் செல்வது வழக்கம். ஒருமுறை, வயலைக் காவல் காக்காமல் விளையாடச் சென்றுவிட்டாள்.

அப்போது அம்பிகை திருபுவனேசை, கூட்டமாக வந்த வெட்டுக் கிளிகளிடமிருந்துப் பயிர்களைக் காக்க அரதனவல்லியின் உருவில் வந்தாள். வயற்காட்டைக் காவல் காத்து நின்றாள். அப்போது, உணவு கொண்டு வந்த அரதனவல்லியின் அன்னை, தன் மகளென நினைத்து அம்பிகைக்கு உணவும் ஊட்டிவிட்டாள்.
விளையாட்டை முடித்து வீட்டுக்குத் திரும்பிய அரதனவல்லி, அம்மாவிடம் `பசிக்கிறது உணவு கொடு’ என்று கேட்க, `நான்தானே வயலுக்கு வந்து அமுதூட்டிவிட்டேன்’ என்று அவளின் அம்மா கூற, மகள் தான் விளையாடப் போயிருந்த விஷயத்தை விவரித்தாள். அப்போதுதான், அரதனவல்லி வடிவில் வந்தது சாட்சாத் அம்பிகையே என்பது புரிந்தது. சிலிர்ப்பும் நெகிழ்வுமாக அனைவரும் அந்த அம்மையைப் போற்றித் தொழுதனர். இங்ஙனம் அம்பிகை நெல்லைக் காத்து நின்றதால், அன்று முதல் அவளுக்கு `திருநெல்லை நாயகி’ என்று திருப்பெயர் வந்ததாம்.

இப்படிப் பல்வேறு திருக்கதைகளைக்கொண்ட இந்தத் தலம் சிற்ப அழகுக்குப் பெயர்பெற்றுத் திகழ்கிறது. முன்புறத்தில் 16 தூண்களுடன் அறுகோண வடிவ நீராழி மண்டபத்துடன்கூடிய தீர்த்தக்குளத்துடன் திகழ்கிறது, கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்.
ஆலயத்தின் மகாமண்டபத்தின் வடக்கே சந்நிதிகொண்டிருக்கும் ஆடல்வல்லானின் திருமேனி, காண்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. மட்டுமன்றி சரஸ்வதி, சாரதாம்பிகை, ஊர்த்துவ தாண்டவர், மீனாட்சிக் கல்யாணம், ரிஷபாரூடர், மயில்மீது ஆரோகணித்திருக்கும் முருகன், வீரபத்ரர், கங்காளர் எனத் திகழும் சிற்பங்கள் அனைத்தும் கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன.
தெற்கு பிராகாரத்தில் வரையப்பட்டிருக்கும் 63 நாயன்மார்களின் திருவுருவமும், மண்டபத்தின் விதானத்தில் வரையப்பட்டிருக்கும் 12 ராசிகள், சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் அற்புதமானவை. அதேபோல் கோபுரத்தில் திகழும் சிவமூர்த்தங்களும் சிவபுராணச் சிற்பங்களும் சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஆங்காங்கே பாண்டியரின் மீன் இலச்சினைகளையும் காண முடிகிறது. இவை செல்வக்குறியீடுகளாகப் பொறிக்கப்பட்டவை என்கிறார்கள்.

ஆலயத்தில் திகழும் கட்டுமானங்கள் பலவும் சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் கால பாணிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருக்கின்றன.
`கொற்றவனுக்கு அருளிய இவ்வூர் ஈஸ்வரன், நம் குலம் தழைக்கவும் அருள் புரிவார்; அம்பிகை விளைச்சல் செழிக்கவும் வாழ்க்கை சிறக்கவும் வரம் தருவாள்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.