
திருச்சி: “எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்’’ என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டிகள் உள்ளன. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். விஜயகாந்துக்கும் அதிக அளவு கூட்டம் கூடியது.