
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு.
இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் ‘சூரியன்’ என்று பொருள்.
இந்த அமைச்சர், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா (Edi Rama) அறிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சோஷலிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்திய எடி ராமா, டியல்லாவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.
இந்த ஏஐ அமைச்சர் டியல்லா குறித்துப் பேசிய பிரதமர் எடி ராமா, “அல்பேனியா அரசு, தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள், அரசுத் திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக இந்த அமைச்சர் கண்காணிப்பார்.
ஊழலை எதிர்த்துப் பணியாற்றுவார். அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை டியல்லாவே எடுப்பார். 100 சதவிகிதம் ஊழல் இல்லாத ஆட்சியை உறுதி செய்வார்.

பொதுமக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற அரசாங்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பொது டெண்டர்களைக் கண்காணிப்பதே டியல்லாவின் முக்கியப் பணியாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.