
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் குறித்து வெளியிடப்பட்ட பொய்-செய்திகளைக் குறிப்பிட்டு 15 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 1.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார்.
Trump சொன்னதென்ன?
நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளை “தீவிர இடது ஜனநாயகக் கட்சியின் மெய்நிகர் ஊதுகுழல்” என விமர்சித்துள்ளார் அவர்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், “நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் மிகவும் சீரழிந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது $15 பில்லியன் டாலர் அவதூறு வழக்குத் தொடுத்ததில் நான் பெருமைப்படுகிறேன், இது தீவிர இடது ஜனநாயகக் கட்சியின் மெய்நிகர் ‘ஊதுகுழலாக’ மாறியுள்ளது.” என எழுதியுள்ளார்.

மேலும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் வகையில் பல வாரங்களுக்கு முதல் பக்க செய்தியை வெளியிட்டதாகவும், அது மிகப் பெரிய சட்ட விரோத பிரசார பங்களிப்பு எனக் கூறியுள்ளார்.
அத்துடன் நியூயார்க் டைம்ஸ் தன்னைப் பற்றியும், தனது குடும்பம், தொழில், அமெரிக்காவை முதலில் உருவாக்குவோம், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (MAGA) இயக்கங்கள், மொத்த நாட்டையும் பற்றி பொய்களைப் பரப்பியிருப்பதாகக் கூறியுள்ளார்.
டைம்ஸ் மட்டுமல்லாமல் சிபிசி, ஏபிசி போன்ற அமெரிக்க ஊடகங்களும் இதுபோன்று தொடர்ந்து அவதூறுகளை பேசிவருவதாகத் தெரிவித்திருக்கிறார்.