
சென்னையில் நேற்று (செப்.15) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்” என்றும், “அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்எல்ஏக்களைக் கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும், கட்சியில் சேர்க்கணுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது?” என்றும் யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் இன்று (செப்.16) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
கூவத்தூரில் நடந்த சில விஷயங்கள் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், “சாத்தான் வேதம் ஓதுவது போல நன்றியைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழக மக்களும் முட்டாள் என நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க முற்பட்டபோது பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பேசுகிறார். அதுவே தவறு.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் அனைவரும் முடிவு செய்து, கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.
அப்போது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது, இவரைக் காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான்.

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராகக் காரணம். அப்போது கூட நான்தான் முதல்வர் எனச் சொன்னால் எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்துப் போட மாட்டார்கள்.
கையெழுத்துகளை வாங்கிய பிறகு அதைச் சொல்லுங்கள் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியை எல்லாம் முதல்வரா ஏற்க முடியாது எனச் சொல்லி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செம்மலை எல்லாம் சுவர் எகிறிக் குதித்து ஓடினார். அவர்களை எல்லாம் பாதுகாத்து வைத்து, அவர்கள் வாக்களித்தாலேயே எடப்பாடியால் முதல்வராக முடிந்தது. ஆனால், அந்த நன்றியை எல்லாம் மறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.