
“மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியபோது “அறிஞர் அண்ணா பிறந்திருக்காவிட்டால் தமிழர்களின் பெருமை உலகெங்கும் சென்றிருக்காது, அண்ணாவின் பேச்சு எம்ஜிஆரை ஈர்த்ததால் 1952 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் எம்ஜிஆர்.
திமுக ஆட்சியில் அமர்வதற்காக எம்ஜிஆர் பம்பரம் போல் சுற்றிச் சுழன்று பணியாற்றினார், கருணாநிதியை திமுக தலைவர் ஆக்குவதற்கு பாடுபட்டவர். எம்ஜிஆரை பதம் பார்த்தவர்தான் கருணாநிதி. திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டாலும் அந்த இயக்கத்திலிருந்து எம்ஜிஆர் எந்த ஒரு பங்கும் கேட்கவில்லை, திமுக-வை அண்ணா உருவாக்கியதால் அந்த இயக்கத்தில் எந்த ஒரு உரிமையும் கேட்காமல் திமுகவை விட்டு வெளியேறினார்.
அண்ணாவின் கொள்கையிலிருந்து கருணாநிதி மாறியதால் அதிமுக-வை எம்ஜிஆர் உருவாக்கினார். அண்ணாவின் கொள்கைகளை ஏற்று தமிழகத்தின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் செயல்பட்டார், அரிதாரம் பூசியவர் எல்லாம் அரசியல் செய்ய முடியுமா? என கருணாநிதி கேலி கிண்டல் செய்தார். கேலி பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் எம்ஜிஆர் அதிமுகவை வழி நடத்தினார்.

எம்ஜிஆரின் கொள்கைகள் எல்லாவற்றையும் ஜெயலலிதா திட்டங்களாக செயல்படுத்தினார், எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி கண் துஞ்சாமல் காத்து வருகிறார், சாமானிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகத் தேர்வு செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்” என்றார்.