
சென்னை: அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக். 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட்டைப் பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஆக.17 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.