
சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் சென்னை தென்மேற்கு மாவட்டத்தின் தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் வடகிழக்கு மாவட்டத்தின் திருவெற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்டு பகுதி, வட்டம், பாகம் அளவில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம், திமுக தலைமையகத்தில் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: இங்கு வந்துள்ளவர்கள் எல்லாம் என்னைப் பார்க்க வந்த கூட்டமில்லை. என்னுடன் செயலாற்ற வந்த கூட்டம்; கொள்கைக் கூட்டம். இந்தியாவிலே முதன்முதலாக ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி உருவாக்கப்பட்டது என்றால், அது திமுகவில்தான். புதிய நிர்வாகிகள் எல்லாம் சிபாரிசு இல்லாமல், முழுவதும் தகுதி அடிப்படையில் பல்வேறு கட்ட நேர்காணல், ஆலோசனைக்கு பிறகே நியமிக்கப்பட்டுள்ளனர்.