
கடந்த வாரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அங்கு வசிக்கும் இந்தியரான சந்திரா நாகமல்லையாவை, குற்றப் பின்னணி கொண்ட மார்டினெஸ் வெட்டிக் கொன்றுள்ளார்.
இந்தச் சம்பவம் சந்திரா நாகமல்லையாவின் மனைவி மற்றும் மகனின் கண்முன்னேயே நடந்துள்ளது.
நான் அறிவேன்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“டெக்சாஸின் டல்லாஸில் நன்கு மதிக்கப்பட்டவரான சந்திரா மல்லையா அவரது மனைவி, மகன் கண்முன்னேயே கொலை செய்யப்பட்டதை நான் அறிவேன்.
சந்திர நாகமல்லையா நாட்டிற்குள்ளேயே வந்திருக்கக் கூடாத சட்டவிரோத கியூபா வெளிநாட்டவரால் கொடூரமாகத் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையாளி குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெரிய அளவிலான வாகனத் திருட்டு மற்றும் பொய்ச் சிறை வைத்தல் போன்ற கொடூரமான குற்றங்களுக்காக ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திறமையற்ற ஜோ பைடன்
இவ்வளவு மோசமான ஒரு நபரைத் தங்கள் நாட்டில் வைத்திருக்க கியூபா விரும்பாததால், திறமையற்ற ஜோ பைடனின் கீழ் நமது நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தச் சட்டவிரோத குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மையாக இருக்கும் காலம் எனது பார்வையில் முடிந்துவிட்டது! உறுதியாக இருங்கள்.

உள்துறை பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிஸ்டி நோயம், அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, எல்லைப் பாதுகாப்புப் பொறுப்பாளர் டாம் ஹோமன், மற்றும் எனது நிர்வாகத்தில் உள்ள பலர், அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவதில் நம்பமுடியாத வேலையைச் செய்து வருகின்றனர்.
எங்கள் காவலில் உள்ள இந்தக் குற்றவாளி, சட்டத்தில் முழுமையாக தண்டிக்கப்படுவார். அவர் முதல் நிலை கொலையாளியாகக் குற்றம் சாட்டப்படுவார்!” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.