
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.
தனுஷ் உடன் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
எங்களுக்கு நன்றி மறக்காத வியாதி இருக்கு
இசை வெளியீட்டு விழாவில் ராஜ்கிரண் குறித்துப் பேசும்போது, “எங்கள் குடும்பத்துக்கே நன்றி மறக்காத வியாதி இருக்கிறது.
ராஜ்கிரண் சார்தான் எங்க அப்பாவுக்கு முதல் பட ஹீரோ, எனக்கும் நீங்கதான் சார். இந்தப் படத்தில் நீங்கள் இருப்பது எங்களுக்கு ஒரு ஆசிர்வாதம்.” என்றார்.
சத்யராஜ் உடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை எனக் குறிப்பிட்ட தனுஷ், “நீங்கள் சீனியர் நடிகர் என்பதால் ஒரு டைரக்டரா சின்ன சின்ன விஷயங்கள் சொல்ல தயக்கமா இருந்தது.
நீங்க கேரவனில் டைம் கிடைக்கும்போது வாக்கிங் பண்றீங்க , எக்சர்சைஸ் பண்றீங்க இந்த ஒழுக்கம் ரொம்ப ஆச்சரியப்படுத்துச்சு ” என்றார்.
அருண்விஜய் சாருக்கு ரத்தம் வந்தது
தொடர்ந்து, “அருண் விஜய் சார் ரொம்ப சீக்கிரமா இந்த படம் பண்ண ஒத்துக்கிட்டீங்க … ரொம்ப ஹார்ட்-வொர்க் பண்ணிருக்கீங்க.
உங்கள தூசிலும் மண்ணிலும் புரட்டி எடுத்திருக்கிறோம், ஆனாலும் கொஞ்சமும் மனசு நோகாம நடிச்சு கொடுத்திருக்கீங்க.
ஒரு சண்டைக் காட்சியில் நான் அவரைக் குத்த வேண்டும். தவறுதலாக என் கை அவர் வாயில் பட்டு ரத்தமே வந்துவிட்டது. வேறு யாராக இருந்தாலும் குறைந்தது 2 மணி நேரம் ஷூட்டிங் நின்றிருக்கும்.
ஆனால் அவர் உடனே ஒரு ஐஸ் கட்டியை எடுத்து வைத்துவிட்டு அடுத்த ஷாட் போகலாம் என வந்துவிட்டார்.” என்றார்.

ரீல்ஸுக்காக பாட்டு பண்ண மாட்டேன்
தொடர்ந்து நடிகைகள் ஷாலினி பாண்டே, நித்யா மேனன், தயாரிப்பாளர் மற்ற நடிகர்கள் குறித்துப் பேசிய தனுஷ் ஜி.வி.பிரகாஷ் குறித்து, “ஜி.வி மாதிரி ஒரு நண்பன் கிடைத்தது உண்மையான ப்ளெஸ்ஸிங்.
இந்தப் படத்துடைய கதையைக் கேட்டுட்டு, நான் ரீல்ஸ் அடிப்படையில இந்த படத்துக்கு பாட்டுப் பண்ண மாட்டேன்னு உறுதியா இருந்தார்.
இப்ப பல பாடல்கள் 15 வினாடி, 30 வினாடி அட்டென்ஷனைப் பிடிக்கிறமாதிரி ரீல்ஸுக்காக வருது. ஆனால் ஜி.வி ரீல்ஸா, யூடியூப் வியூஸா ஹிட் ஆகும் பாடல்களைப் பண்ண மாட்டேன், படம் வந்தபிறகு நின்னு பேசுற மெலடிஸ்தான் பண்ணுவேன்னு உறுதியா இருந்தார்.
இதுமாதிரி மண்சர்ந்த, கிராமத்து படங்கள் வரும்போது அதற்கு உண்மையாக இருப்பேன்னு சொன்னார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும்…

முன்னாடி 35-40 ரூபாய்க்கு ஒரு கேசட் வாங்கினால், வாங்கியதற்காக அதை சில முறை கேட்போம். ஆனால் இப்போதோ அப்படிக் கிடையாது, நம்மிடம் கோடிக்கணக்கான பாடல்கள் உள்ளன.
ஒரு பாடலுக்கு 10 வினாடிதான் நல்லா இல்லைன்னா அடுத்த பாட்டுக்கு மாறிவிடுவோம். அந்த 10 வினாடிக்குள்ள ஒரு பாட்டை பிடிக்கவைப்பது எளிது கிடையாது.
நமக்கு இன்னும் ஆரோக்கியமான தரமான இசை வரணும் . ஸ்ட்ராங்கான மெலடீஸ் வரணும்.
அடுத்த தலைமுறை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இருக்கீங்க, ஒரு தலைமுறைக்கான மியூசிக் டேஸ்டை செட் பண்ணும் கடமை உங்களுக்கு இருக்கு.
அதெல்லாம் புரிஞ்சுகிட்டு ஸ்ட்ராங்கான மெலடீஸ் கொடுப்பீங்கன்னு நம்புறேன். ரொம்ப நல்லா பண்ணிட்டு இருக்கீங்க.” தொடர்ந்து தொழில்நுட்பக் கலைஞர்களுடனான அனுபவங்கள் பற்றிப் பேசினார் தனுஷ்.