
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த புதிய புதிய சாலைகளை அமைத்து வருகிறார்.
அதேசமயம் எரிபொருளில் எத்தனாலை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும், இதன் மூலம் காற்று மாசுபடுவது குறையும் என்றும், விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்.
நிதின் கட்கரி மகன் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால் அவர் எத்தனாலை அதிக அளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் எத்தனாலை அதிக அளவில் எரிபொருளில் பயன்படுத்துவதன் மூலம் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தனக்கு எதிரான பணம் கொடுத்து சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்யப்படுவதாக நிதின் கட்கரி இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், ”எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்ய நான் வழிகாட்டுகிறேன். நான் ஆலோசனைகளை வழங்குகிறேன். ஆனால் மோசடியில் ஈடுபடுவது கிடையாது.
சமீபத்தில் எனது மகன் 800 கண்டெய்னரில் ஈரானில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்தான். அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தான். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறான்.”
எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை இருக்கிறது. அதோடு ஒரு சாராய ஆலை, மின் உற்பத்தி மையமும் எனக்கு இருக்கிறது.
நான் எனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக விவசாயத்தில் பரிசோதனை செய்வதில்லை. நாக்பூர் முழுவதும் காய்கறி விற்பனையாளர்களுக்குப் பழ வணிக வளாகங்களை நிறுவ அறிவுரை வழங்கினேன்.
உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன், நான் இதையெல்லாம் என் சொந்த சம்பாத்தியத்திற்காகச் செய்யவில்லை, இல்லையெனில் நீங்கள் வேறு ஏதாவது நினைக்கலாம்.

எனக்கு எனது வருமானம் போதுமானது. மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறது. எனக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் இயக்கப்படுகின்றன”என்று தெரிவித்தார்.
நிதின் கட்கரி கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரதமர் பதவிக்கு முன்நிறுத்தப்படுவார் என்று செய்திகள் வெளியானது.
அதன் பிறகு நிதின் கட்கரி அதிகமாகத் தனது சொந்த ஊரில் இருந்து கொண்டு நாடு முழுவதும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க தலைமையும் நிதின் கட்கரியை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதிக அளவில் முன்நிறுத்துவதில்லை.