
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார்.
சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது கோவையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும். ஆனால் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களோ நிலைத்து நிற்கும்.
தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.
சொத்துவரி, மின்சார வரி, கடை வரி போன்ற வரிகள் பெருமளவில் ஏற்றப்பட்டுள்ளன.
எங்கள் ஆட்சியில் 1,000 சதுர அடி வீடு கட்டுவதற்கு ரூ.37,000 தான் செலவானது. ஆனால் இன்று திமுக ஆட்சியில் அதே வீட்டுக்கு ரூ.88,000 ஆகிவிட்டது.
மக்களின் சொந்த வீடு கனவு எட்டாக்கனியாகிவிட்டது.

மக்கள் படுகின்ற துன்பத்தைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விடியா திமுக அரசு விவசாய விரோத அரசாக உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை.
98% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சைப் பொய் சொல்கிறார்கள்.
டாஸ்மாக் துறையில் மட்டுமே ரூ.40,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. மேலிடம் வரை எல்லோருக்கும் தொடர்புள்ளது.

திமுக ஊழலின் ஊற்றுக்கண். 10 ரூபாய் என்றாலே பாலாஜி பெயர்தான் நினைவுக்கு வருகிறது.
ஸ்டாலின் அவர்களே, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். .” என்றார்.