• September 14, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் சித்திக்கு 50 வயதாகிறது. என் அம்மாவின் தங்கை அவர். என் அம்மாவுக்கு 50 வயதில் பீரியட்ஸ் நின்று மெனோபாஸ் வந்துவிட்டது. சித்திக்கு இன்னும் தொடர்கிறது. ஆனால், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?


பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸுக்கான சராசரி வயது 51. ஆனால், இதை பல விஷயங்கள் பாதிக்கலாம்.

சில பெண்களுக்கு சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு இப்படி சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். 

மெனோபாஸுக்கு முந்தைய நிலையை ‘பெரிமெனோபாஸ்’ என்று சொல்வோம்.  சிலருக்கு இது 40 வயதில் ஆரம்பிக்கலாம்.  இன்னும் சிலருக்கு  30 வயதின் இறுதியில் கூட ஆரம்பிக்கலாம். 

மெனோபாஸின் பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும்.

இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அதாவது உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். 

மெனோபாஸ்

இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம்  அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும்.

ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன் ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம்.

உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்று மெனோபாஸுக்கான அறிகுறிகள், பெரிமெனோபாஸ் காலத்திலேயே சிலருக்கு ஆரம்பிக்கும். 12 மாதங்களுக்கு தொடர்ந்து பீரியட்ஸே வரவில்லை என்றால் ஒரு பெண் மெனோபாஸை அடைந்துவிட்டார் என எடுத்துக்கொள்ளலாம்.

முறைதவறிய மாதவிலக்கானது 7 நாள்கள் இடைவெளியில் வந்தால் ஒருவர் பெரிமெனோபாஸின் ஆரம்பநிலையில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.  அதுவே அந்த இடைவெளியானது 60 நாள்கள் என நீடித்தால்  அந்தப் பெண்  மெனோபாஸ் நிலையில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். மெனோபாஸுக்கான அறிகுறிகளுடன் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, எலும்புத் தேய்மானம் போன்றவையும் வரலாம்.

கேன்சர் சிகிச்சையில் இருந்தாலோ, கர்ப்பப்பையை அகற்றிவிட்டு சினைப்பைகள் மட்டும் இருக்கும் நிலையிலோகூட சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம்.  கர்ப்பப்பையை அகற்றியதால் மாதவிடாய் நின்று போயிருக்கும்.

ஆனால், சினைப்பையில் உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் அவர்களுக்கு சப்போர்ட்டை கொடுத்துக் கொண்டிருக்கும். இவர்களுக்கு சராசரி வயது வரை சினைப்பைகள் இயங்காது என்பதால் வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே மெனோபாஸ் ஆகலாம். 

மாதவிடாய் விடுப்புக் கேட்ட மாணவி
மாதவிடாய்

குடும்ப பின்னணியில்  எல்லோருக்கும் இள வயதிலேயே மெனோபாஸ் வந்திருந்தால் உங்கள் சித்திக்கும் அப்படி வர வாய்ப்புகள் உண்டு. பெரி மெனோபாஸ் காலத்தில் உங்கள் சித்திக்கு அதிக ப்ளீடிங் இருந்தால், அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்க அதிகமாக இருந்தாலோ, 7 நாள்களுக்கு மேல் ப்ளீடிங் தொடர்ந்தாலோ, இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங் இருந்தாலோ, 21 நாள்களுக்கு முன்பாக பீரியட்ஸ் வந்தாலோ, அடிவயிற்றில வலி இருந்தாலோ மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் சரியாக இருக்கும். மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் சித்தியும் மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கவலை வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *