
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
அதில் இளையராஜா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது…
“கலை தாய்க்கு மட்டுமல்ல… தமிழ் தாய்க்கும் சொந்தமானவர் இளையராஜா. அதற்காகத் தான் இந்தப் பாராட்டு விழா.
ஒரு ராஜா இருந்தால், மக்கள் இருப்பார்கள். எல்லைகள் இருக்கும். ஆனால், இந்த ராஜா மொழிகள் கடந்தவர்… நாடுகள் கடந்தவர்… எல்லைகள் கடந்தவர்… எல்லோருக்குமானவர்.
இளையராஜாவின் இசை தாயாய் தாலாட்டுகிறது, காதலின் உணர்வுகளை போற்றுகிறது, வெற்றி பயணத்துக்கு ஊக்குவிக்கிறது, வலிகளை ஆற்றுகிறது உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவர் இளையராஜா இல்லை… இணையற்ற ராஜா.
கலைஞரின் நினைவு
தனக்கு ‘இசைஞானி’ என்ற பட்டத்தைத் தந்த கலைஞரின் பிறந்தநாளன்று தான், தானும் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காக தன் பிறந்தநாளை ஜூன் 2 அன்று இளையராஜா மாற்றிக்கொண்டார்.
கோரிக்கை
எல்லோரும் முதல்வரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால், ஒரு முதல்வராக தமிழ்நாடு மக்கள் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன் – ‘இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறலும், நற்றிணையும் ஐங்குறுநூறும், பரிபாடலும், பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்கும்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்கள்.

நீங்கள் சங்கத்தமிழ் மற்றும் தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட வேண்டும்.
இசைஞானியைக் கௌரவிக்கும் விதமாக, இசைத் துறையில் ஆர்வத்தோடு சிறந்த இசையைப் படைக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக, இனி ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் தமிழ்நாடு அரசு சார்பாக ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.
இளையராஜாவிற்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.