
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.
இதில், யூடியூப் உலகில் ஃபிக்ஷன் கன்டென்ட்களுக்கு இருக்கும் கடும்போட்டியைத் தாண்டி, விதவிதமான ஐடியாக்களைத் தேடிப் பிடித்து, அவற்றை நகைச்சுவையுடன் பகிர்ந்து, ரீல்ஸ், வீடியோஸ் எனக் கிடைத்த கேப்பில் எல்லாம் ஆட்டோ ஓட்டி மகிழ்விக்கும் இந்த மதராஸி சேனலுக்கு Best Fiction Channel விருது வழங்கப்பட்டது.
விருதினை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்க, மதராஸி சேனல் குழுவினருடன் கலாட்டா குரு பெற்றுக் கொண்டார்.

விருதினை வழங்கிப் பேசிய ஜெயக்குமார், “திரைப்படத்தில் ஆதிகாலத்திலிருந்து மீடியாவைக் கையில் எடுத்தவர்கள் மூன்றே பேர்தான்.
ஒன்று, கலைவாணர் என்.எஸ்.கே. இரண்டு, நடிகர் எம்.ஆர்.ராதா. மூன்று, நம்முடைய சின்னக் கலைவாணர் விவேக்.
நகைச்சுவையுடன் சமூகக் கருத்தைக் கூறும்போது, அது சுலபமாக மக்களிடம் போய்ச் சேர்கிறது. எனவே, அது போன்ற படைப்புகளை வருங்காலத்தில் படைத்து, `ஒரு சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற கலாட்டா குருவுக்கு என் வாழ்த்துகள்’’ என்று கூறி வாழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து பேசிய கலாட்டா குரு, “விலை குடுத்து வாங்க முடியாத விருது. மதராசியின் முதல் விருது இது. விருது கொடுத்தால் வியூஸ் வரும் என்று நினைக்காமல், நாங்கள் செய்த பணிக்கு விருது கொடுத்திருக்கிறது விகடன்.
2019, ஏப்ரல் 14 அன்று மதராசியின் முதல் வீடியோவை வெளியிட்டதிலிருந்து இன்றுவரை நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கேன்.
சினிமா ஒரு மாரத்தான் போட்டிபோல இருக்கிறது. அப்படிப்பட்ட மாரத்தானில் சோர்வடையும்போது இது போன்ற விருதுகள் மீண்டும் வேகத்துடன் செயல்படவைக்கின்றன, மேலும் பேஷனுக்காக என்னோடு பயணிக்கும் என் குழுவினருக்கு நன்றி.

இந்த ஆண்டு விகடன் டிஜிட்டல் விருது பெற்றிருக்கிறேன். 2026-27ல் OTT விருது பெறுவேன்.
2028-29-ல் சினிமா விகடன் விருது பெறுவேன். அதற்காக, தரமாகப் பணியாற்றுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் உற்சாகமாகப் பேசினார்.