
திருச்சியில் விஜய் பிரசாரம்
திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல் பிரசார பயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தது.
ஆனால், அனுமதி வாங்கியிருந்த பத்தரை மணிக்கு அவரால் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்துக்கு வரமுடியவில்லை. காரணம், ஒன்பதரை மணிக்கே திருச்சி விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் அவர் வந்துவிட்டாலும், மரக்கடை பகுதிக்கு வந்துசேர அவருக்கு 2 மணிக்கு மேல் ஆனது.
அந்த அளவுக்கு இருபுறமும் கூடியிருந்த கூட்டம், அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு சரியான நேரத்துக்கு செல்லவிடவில்லை. கூட்ட நெரிசலில் பலரும் மயங்கினர்.
ஒருவழியாக மரக்கடை பகுதிக்கு கூட்டத்தை நீந்திக்கொண்டு வந்துசேந்த விஜய், மைக்கை பிடித்தபேச ஆரம்பிக்க மைக் மக்கர் செய்தது. அதன்பிறகு, 15 நிமிடங்கள் உரையாற்றிய அவர்,
`திருச்சில தொடங்கினா திருப்புமுனை’
“அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்கிறதுக்காக குலதெய்வ கோயிலுக்குப் போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்களாம்.
அந்த மாதிரி தேர்தலுக்குப் போறதுக்கு முன்னாடி நம்ம மக்களைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்திருக்கேன்.
ஒரு சில மண்ணைத் தொட்டா ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்துல இருந்து தொடங்கினா நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா… அது மாதிரி திருச்சில தொடங்கினா திருப்புமுனையா அமையும்.
அதற்கு உதாரணமாக அண்ணா அவர்கள் 1956-ல் தேர்தலில் நிற்க வேண்டும் என்று நினைத்தது திருச்சியில்தான்.
எம்ஜிஆர் 1974-ல் முதல் மாநாடு நடத்தியது திருச்சிதான். அது மாதிரி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது.
பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம்.
கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாமல், உங்களைப் பார்க்கும்போது மனசுக்குள் ஒரு பரவசம், ஒரு எமோஷன்.
திமுக தேர்தல் வாக்குறுதி
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 505 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில், எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்?
டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதியத் திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?
கிட்னி திருட்டு
நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். தி.மு.க-வினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே? தி.மு.க-வைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள்
பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும், சட்டப் பிரச்னைகளிலும் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்” என்று பேசி முடித்தார். அதனைத்தொடர்ந்து, அடுத்து அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் பரப்புரைக்கு கிளம்பினார்.