
சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.