• September 13, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகமே.

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள், பட்டா மாற்றம், வாரிசுச் சான்று, சிட்டா அடங்கல், முதியோர் ஓய்வூதியம், அரசு வழங்கும் உதவித் தொகைகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் என அத்தியாவசியமான சேவைகள் அனைத்தும் வழங்கப்படும் இடம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகமே.

தினமும் ஏராளமான மக்கள் இவ்வலுவலகத்திற்கு வருகின்றனர். ஆனால், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் இன்று மோசமான நிலையில் இருப்பது உள்ளூர் மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்

செண்டூர் விஏஓ அலுவலகம் பல ஆண்டுகளாக எந்த வகையான பராமரிப்பும் செய்யப்படாததால், தற்போது சிதிலமடைந்த தோற்றத்தில் உள்ளது. அலுவலகத்தின் முன்புறம், உள்பகுதிகள், மேல்மாடி அனைத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளிப்படுகின்றன. இடைவிடாமல் பெயர்ந்து விழும் சிமெண்ட் துகள்கள், அங்கு வரும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளன. அலுவலகத்தின் மேல்பகுதியில் பராமரிப்பின்றி செடிகள், கொடிகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. கதவுகள், சன்னல்கள் சிதைந்து, பெயரளவிலேயே காணப்படுவதால், அலுவலகத்தில் இருக்கும் முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

மக்கள் கவலை

இது குறித்து செண்டூர் கிராம மக்கள் கூறுகையில் “இந்த கட்டிடம் மிகவும் பழமையானது. உறுதித்தன்மையே கேள்விக்குறியாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து பெரிய விபத்து நடக்கக்கூடும். ஏற்கனவே சிமெண்ட் கலவை பெயர்ந்து கிராம மக்கள் மீது விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதை நினைத்தே நாங்கள் அலுவலகத்துக்கு வர அஞ்சுகிறோம்” என்று செண்டூர் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்

அவர்கள் மேலும் கூறுகையில், “புதிதாக வந்த கிராம நிர்வாக அலுவலர் கூட, அலுவலகத்துக்குள் அமரத் தயங்குகிறார். அலுவலகம் முன்பாகவே ஒரு கீற்று கூரை அமைத்து, அங்கேதான் மக்களை சந்திக்கிறார். இதிலிருந்தே கட்டிடத்தின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது” எனக் கூறினர்.

செண்டூர் ஊராட்சித் தலைவர் கூறுகையில்:

“மக்கள் தினமும் அதிக அளவில் அலுவலகத்துக்கு வருகின்றனர். ஆனால், இவர்களின் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தற்போதைய அலுவலகத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி, மக்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

கிராம நிர்வாக அலுவலரின் விளக்கம்

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகன் தெரிவித்ததாவது: “இங்கு முன்பு பணியாற்றிய விஏஓ பல முறை இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். கலெக்டரும் புதிய அலுவலகம் கட்டித் தரப்படும் என உறுதி அளித்திருக்கிறார். விரைவில் புதிய அலுவலகம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்
செண்டூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்

மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மையமாக விளங்கும் விஏஓ அலுவலகத்தில், உயிரைப் பணயம் வைத்து சான்றிதழ் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.

பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடியாகச் செவிசாய்த்து, முதலில் தற்காலிக அலுவலகம் ஏற்படுத்தி, பின்னர் பாதுகாப்பான புதிய கட்டிடம் அமைத்துத் தர வேண்டியது மிகவும் அவசியம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *