
சென்னை: ஐ.டி. துறையில் உலகம் முழுவதிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழர்களின் ரத்தத்தில் பொறியியல் ஊறியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் கட்டப்பட்ட துறைமுகங்களே இதற்கு சான்று. உலகம் முழுவதும் உள்ள வர்த்தக மையங்களுடன் தமிழர்கள் பன்னெடுங்காலமாக பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இதற்கான சான்றாக, கீழடியில் ரோமானிய காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.