
சென்னை: அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையை திரும்புப் பெறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அந்தக் குறிப்பாணையின் மூலம், முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.