
சென்னையைச் சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்), தன் தாத்தா (ஜி.எம்.குமார்), தாய், தங்கையுடன் பெரிய வீட்டில் வசித்து வருகிறார். இயக்குநராகும் முயற்சியிலிருக்கும் குமரன், தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடுகிறார்.
இந்நிலையில், வீட்டை விற்று அப்பணத்தில் படம் இயக்க முடிவு செய்யும் போது, அதே வீட்டில் தனி அறையில் வசித்து வரும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான வரதராஜன் (இளங்கோ குமரவேல்) மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதனால், காவல்துறையில் விசாரணை வளையத்தில் குமரனும், அவரது குடும்பமும் சிக்கிக் கொள்கிறது.
மறுபுறம், வீட்டை விற்கும் முயற்சிகளுக்கும் தடைகள் வருகின்றன. வரதராஜனைக் கொன்றது யார், கடைசியில் வீட்டை விற்க முடிந்ததா, குமரன் இயக்குநர் ஆனாரா போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள ‘குமாரசம்பவம்’ திரைப்படம்.
தன் கதாபாத்திரத்திற்கு காமெடிதான் பிரதானம் என்றாலும், ஆங்காங்கே வரும் எமோஷன் காட்சிகளையும் பொறுப்போடு அணுகி, கவனிக்க வைக்கிறார் குமரன் தங்கராஜன். காமெடி, எமோஷன் என இரண்டு ரூட்டிலும் வரும் சில காட்சிகளையும் தனியாளாகக் கச்சிதமாக நகர்த்தி, தன் அறிமுகத்தை அழுத்தமாகவே பதிக்கிறார் குமரன்!
கதையின் பிரதான கதாபாத்திரத்தில் வரும் குமரவேல், போராளிக்கான ஆக்ரோஷம், சாமானியனுக்கான எமோஷன் என ஆழமான பங்களிப்பைச் செய்து, படத்திற்கு அடித்தளமாகியிருக்கிறார்.
தன் அனுபவத்தால் பலம் சேர்க்கிறார் ஜி.எம்.குமார். இரண்டாம் பாதியில் வரும் காமெடிகளைக் குத்தகைக்கு எடுத்து, நம் வயிற்றை வலிக்க வைத்திருக்கிறார் வினோத் சாகர்.
ஒன்லைன் கவுன்ட்டர்களால் வரும் காட்சிகளிலெல்லாம் கலகலப்பூட்டியிருக்கிறார் பால சரவணன். சிவா அரவிந்த், வினோத் முன்னா, பாயல் ராதாகிருஷ்ணன், லிவ்விங்ஸ்டன், கௌதம் சுந்தரராஜன் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

காமிக்கலான உலகைக் கட்டமைக்கவும், ஒரே வீட்டிற்குள் சுழலும் காட்சிகளை அலுப்பு தட்டாத வகையில் கொண்டுவரவும் பங்களித்திருக்கிறது ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு. இவற்றுக்கு ஜி. மதனின் நேர்த்தியான படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கிறது.
அச்சு ராஜாமணியின் இசையில், பாடல்கள் திரையோட்டத்தோடு வந்துபோகின்றன. தன் அட்டகாசமான பின்னணி இசையால், காமெடி ட்ராக்குகளுக்கு மைலேஜ் ஏற்றியிருக்கிறார் அச்சு!
வரதராஜனின் மரணம், அதை விசாரிக்கத் தொடங்கும் காவல்துறை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வருகை எனத் தொடக்கத்திலிருந்தே கதையோடு, காமெடியையும் கலந்தே பேசுகிறது திரைக்கதை.
விசாரணை காட்சிகளுக்கிடையே கதாநாயகனின் காதல், அவரது வாழ்க்கை பிரச்னைகள், வரதராஜனின் வாழ்க்கை, குடும்பத்தினரின் உலகம், அவர்களுக்கு வரதராஜன் மீதான அன்பு எனக் கிளைக்கதைகளும் கச்சிதமாக அவிழ்கின்றன.

எல்லா காட்சிகளிலும் காமெடி ஒன்லைன்களும், காமெடி மைண்ட் வாய்ஸ்களும் நிரம்பியிருப்பது, சில இடங்களில் ஓவர் டோஸ் ஆகியிருக்கின்றன.
சின்ன, சின்ன துணை கதாபாத்திரங்களுக்குக் கூட, மைண்ட் வாய்ஸ் காமெடிகளைத் திணித்தது, அக்காட்சிகளின் நோக்கத்தைப் பின்னுக்கு இழுக்கின்றன.
அதேநேரம், கதை நகர்வுகளும், திரைக்கதை திருப்பங்களும் சுவாரஸ்யத்தைக் குறையாமல் பார்த்துக்கொள்வது பலம்! மேலும், குமரவேல், ஜி.எம்.குமார் ஆகியோரின் பங்களிப்பால், எமோஷன் காட்சிகளும் வீரியமாக இருக்கின்றன.
இரண்டாம் பாதி, பக்கா ‘காமெடி சினிமா’ ஜானருக்குள் போகும் திரைக்கதை, அதற்கு ஏற்றார் போல், காமெடி ஐடியா தொகுப்புகளையும் வரிசையாகக் கொண்டிருக்கின்றன.
குமரவேலின் மரணத்தைத் துப்பறியக் கிளம்பும், குமரன் அண்ட் கோ செய்யும் லூட்டிகளில் லாஜிக்குகளுக்கு எக்கச்சக்க தட்டுப்பாட நிலவினாலும், ஒவ்வொரு காமெடி வசனங்களும் க்ளிக் ஆகியிருக்கின்றன.
இத்தொகுப்பில், வினோத் சாகரின் மேனரிஸம் இரண்டாம் பாதியின் காமெடி பவர் ஹவுஸ்! முதல்பாதியில் வரும் கதாபாத்திரங்களையும், திருப்பங்களையும் வீணாக்காமல், இரண்டாம் பாதியில் இணைத்த விதமும் கிளைக்கதைகளை இறுதியில் சுபமாகக் கோத்த விதமும் ‘நச்’!

குமரவேல் மீதான கண்ணோட்டத்தை குமரன் எந்த அழுத்தமான காரணமும் இல்லாமல் மாற்றிக்கொண்டே இருப்பது, மிரட்டாத வில்லன்கள், எமோஷன் நிறைந்திருக்க வேண்டிய காட்சிகளிலும் காமெடிகளை ஏகத்திற்கு நிரப்பியது, நம்பகத்தன்மையே இல்லாத காவல்துறையின் விசாரணை, குமரவேலின் மரணத்தை ‘சப்’ என முடித்து வைத்தது என, சில சறுக்கல்களும் இந்தச் சம்பவத்தில் அணிவகுக்கின்றன.
காமெடியே பிரதானம், துணைக்கு எமோஷன் எனக் களமிறங்கி ஒரு ஜாலி பட்டாசாக சம்பவம் செய்திருக்கிறது இந்த ‘குமாரசம்பவம்’.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…