
கற்பதற்கு வயதொன்றும் தடையில்லை என இதுவரை பலர் நிரூபித்துள்ளனர். அவர்களுடன் இணைந்திருக்கிறார் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த 72 வயதான செல்வமணி.
செல்வமணி ஐ.டி.ஐ முடித்துவிட்டு, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். அதன்பிறகு, எம்.காம்., எம்.பி.ஏ. படித்துள்ளார். இவரின் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் உள்ள சீனிவாச சுப்புராயா அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
“எனக்கு பத்தாவது முடிச்சதுலர்ந்தே டிப்ளமோ படிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, அப்போ படிக்க முடியல. வேலைக்கும் போயிட்டேன். ஓய்வுக் கிடைச்சி வீட்ல இருக்கும்போது டி.வி பார்க்குறதுக்கு அடிக்ட் ஆயிட்டேன். இதனால என்னோட ஞாபக சக்தி கம்மியாகுறத என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது. வீட்ல நாலு சாமான் வாங்கிட்டு வரச் சொன்னா நான் ரெண்டு சாமான் மறந்துடுவேன்.
அப்போ தான், மறுபடியும் எதாவது படிக்கலாமேன்னு தோணுச்சு. அதையும் ஒரு காலேஜ்ல போய் படிச்சா ஞாபக சக்திக்கும் நல்லதுன்னு தோணுச்சு. எனக்கும் டிப்ளமோ படிக்கணும்னு ஆச இருந்துச்சு. அதான் இப்ப படிச்சிட்டு இருக்கேன். காலேஜ் போய் படிக்கிறதுனால கவனம் சிதறாம படிக்கிறேன். ஞாபக சக்தியும் அதிகமாகுது.
என்னோட ரெண்டு பொண்ணுங்களுமே டீச்சரா இருக்காங்க. ஒரு பொண்ணு இந்தி டீச்சர். இன்னொரு பெண்ணு இங்கிலிஷ் டீச்சர். என் பெண்ணுங்க கொடுத்த உத்வேகத்தாலதான் நான் எம்.காம்., எம்.பி.ஏ படிச்சேன். உடல்நிலை சரியில்லாத மனைவிக்கு வீட்ல கொஞ்சம் வேலை செஞ்சி கொடுத்துட்டு காலை 6 மணிக்கு வீட்லிருந்து கெளம்புனா நைட் 7 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன்.
வீட்ல படிக்க முடியாது. வேலை சரியா இருக்கும். அதனால, காலேஜ்லே அன்னைக்கி நடத்துற பாடத்தை அன்னிக்கே படிச்சுடுவேன். எல்லா ரெக்கார்டு நோட்டையும் நான் தான் கிளாஸ்லே ஃபர்ஸ்ட் முடிச்சேன். என்னைப் பார்த்துதான் மந்தவங்க எழுதினாங்க’’ என்கிறார் ஆனந்தமாக.

’’நான் முதல் நாள் காலேஜ் வந்தப்ப எல்லாரும் என்ன வாத்தியார்னு நெனச்சிட்டாங்க. இல்ல நானும் ஸ்டூடண்ட்தான்னு சொன்னதும் எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். எல்லாரும் அதிலேர்ந்து மீண்டு வரவே ரெண்டுநாள் ஆகிடுச்சி. கூடப் படிக்கிற பசங்க எல்லாரும் என்னை தாத்தான்னு கூப்புடுறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
பாடத்துல ஏதாவது சந்தேகம்னா கூடப் படிக்கிற பசங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிப்பேன்’’ என்றவரிடம், தற்கால கல்வி முறைக்கும், கடந்த கால கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிக் கேட்டோம்.
“இந்தக் காலத்துல ஃபர்ஸ்ட் மார்க் எடுக்குறவங்கதான் நல்லா படிக்கிறாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் யாரு புரிஞ்சி படிக்கிறாங்களோ அவங்கதான் பெஸ்ட். அந்தக் காலத்துல டியூசன் போனா மக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, இந்தக் காலத்துல டியூசன் போறத கெத்தா சொல்லிக்கிறாங்க.
அந்தக் காலத்து கல்விமுறையில வாழ்க்கை பாடம் சம்பந்தமான கற்பித்தலும் இருக்கும், ஆனா இந்தக் காலத்துல போர்ஷன் முடிச்சா போதும், மார்க் எடுத்தா போதும்னு மதிப்பெண்களைத் துரத்திக்கிட்டு ஓடுற கல்வி முறையா இருக்கு’’ என்கிறார் கவலையுடன்.

“நாங்க ஒரு பேனா வாங்குனா அந்தப் பேனா உடைஞ்சாதான் இன்னொரு பேனாவே வாங்குவோம். ஆனா, இந்தக் காலத்து பசங்களுக்கெல்லாம் பேனா மட்டும் இல்ல, அவங்க கேட்குற எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்திடுறாங்க. இவங்களுக்குப் படிப்போட அருமையும் தெரியல, பணத்தோட அருமையும் தெரியல…
செல்போன் இருந்தாலே போதும்னு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. படிக்க வேண்டிய வயசுல நல்லா படிச்சி வாழ்கையில முன்னேறிடணும். இல்லாட்டி ஓய்வெடுக்க வேண்டிய வயசுல உழைக்க வேண்டி வரும்’’ என்கிற அறிவுரையும் சொல்கிறார் செல்வமணி.
செல்வமணி பற்றி கல்லூரி முதல்வர் டாக்டர்.ஏ. குமார், “இவருக்கு அட்மிஷன் போடும்போது மெஷினை ஹேண்டில் பண்ணுவாங்களான்னு சந்தேகம் இருத்துச்சி. ஆனா, இவர் எல்லாமே நல்லா பண்றார். இங்க படிக்கிற மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமா இருக்கார். அவரோட வயசைக் காரணம் காட்டி எந்தச் சலுகைகளும் எடுத்துக்கிறதுல்ல. இவங்கள பார்த்ததுக்கு அப்பறம் எனக்கே இன்னும் ரெண்டு டிகிரி படிக்கலாம்னு தோணுது’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
முதுமையிலும் கற்றல் இனிமை..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…