
வாராணசி: பிரதமர் நரேந்திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்மூலம் வாராணசியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்மூலம் 8 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று உத்தர பிரதேசத்தின் வாராணாசிக்கு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு வாராணசி சென்றார்.
வாராணசி தாஜ் ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். அப்போது விண்வெளி, வேளாண்மை, அறிவியல்-தொழில்நுட்பம், கடல்சார் ஆராய்ச்சி, நீர்நிலைகள் குறித்த ஆராய்ச்சி, அரசு ஊழியர்களுக்கான திறன்சார் பயிற்சி, மின்சார உற்பத்தி, குறு-சிறு தொழிற்சாலைகள் மேம்பாடு, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது உட்பட இருநாடுகளிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.