
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), காசா மக்களைத் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடுமையாக எச்சரித்திருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
நெதன்யாகு என்ன பேசியிருக்கிறார்?
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடைபெற்ற குடியேற்றத் திட்ட கையெழுத்து விழாவில் பேசிய நெதன்யாகு, “இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது. இது நமக்குச் சொந்தமான இடம்,” என்று தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
பாலஸ்தீனம் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளது; அதனைச் சரி செய்யவே தாக்குதல் நடத்துகிறோம் என்று இஸ்ரேல் கூறுகிறது.
இந்நிலையில், நெதன்யாகு இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இஸ்ரேலின் நகர்வுகள்
பாலஸ்தீனம் இன்னும் பரவலாக நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இஸ்ரேலின் அத்துமீறலுக்கு எதிராகவே இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், பாலஸ்தீனத்தை முற்றிலும் காலி செய்யும் நோக்கில், அங்குள்ள மக்களை வெளியேற்றுவதில் தீவிரமாக உள்ளது இஸ்ரேல் அரசு.
மேலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், இந்த வாரம் கத்தார் நாட்டின் மீது நடத்திய தாக்குதலும் ஒன்று.