உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்திருக்கிறார் ‘Oracle’ நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன்.
2021- ஆம் ஆண்டில் இருந்து டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் தொடர்ந்து உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று(செப்.12) காலையில் ‘Oracle’ நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதல் இடத்தைப் பிடித்து எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார்.
81 வயதான எல்லிசனின் சொத்து மதிப்பு தற்போது 393 பில்லியன் டாலராக இருக்கிறது.
இதன் மூலம் 384 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ள மஸ்க்கை அவர் முந்தி இருக்கிறார்.
இதனை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தற்போது எல்லிசன் மற்றும் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
யார் இந்த லேரி எல்லிசன்?
1944- ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் பிறந்தவர் லேரி எல்லிசன்.
1977 ஆம் ஆண்டு ‘மென்பொருள் மேம்பாட்டு ஆய்வகங்கள்’ என்ற பெயரில் ‘Oracle’ நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்.
1980கள், 90களில் ‘Oracle’ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவன தரவுத்தளமாக உயர்ந்தது.

IT துறையில் ஒரு புரட்சி நாயகனாகக் கருதப்படும் லேரி எல்லிசன் 2020க்குப் பிறகு தனது கவனத்தை முழுமையாக AI மற்றும் கிளவுட் பக்கம் திருப்பி இருக்கிறார்.
அவரின் AI கண்டுபிடிப்புகள் Oracle பங்குகளை இரட்டிப்பாக்க, எலிசனின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்திருக்கிறது.
81 வயதில் உலகின் நம்பர் 1 பணக்காரர் இடத்தைப் பிடித்திருக்கும் லேரி எல்லிசனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருத்து வருகின்றனர்.