
திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளில் சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. திமுக விலாசம் தெரியாமல் போக வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்டவாரியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்தோம். ஆனால், திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்காக என்ன செய்தது?.
ஏழை எளிய மக்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தியதுதான் திமுக ஆட்சியின் சாதனை.
நாங்கள் கொண்டு வந்தோம் என்பதற்காகவே அரசுக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள்,செவிலியர்களை நியமிக்காமல் திமுக அரசு உள்ளது.
மக்களுக்கு நன்மை என்று பார்க்காமல் இதில் என்ன அரசியல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் ஸ்டாலின் இருவரும் தங்களது குடும்பத்தைப் பற்றியே சிந்திக்கின்றனர்.
ஆனால், முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்களைப் பற்றிதான் சிந்தித்தனர். ஏனென்றால், மக்கள்தான் அவர்களின் வாரிசு.
ஊழல்
கருணாநிதியின் வாரிசுகள் செல்வ செழிப்போடும் வாழ வேண்டும் என்பதற்காக அவரது குடும்பம் 8 கோடி மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது.
ஊழல் என்றால் அது திமுக; திமுக என்றால் ஊழல். ஊழலின் ஊற்றுக்கண் திமுக. கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்தவர்கள் திமுக-வினர்.

1 கோடி கையெழுத்து
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஊர் ஊராகச் சென்று பெட்டியை வைத்து மக்களிடம் மனு வாங்கினீர்களே ஸ்டாலின். நீட் தேர்வு ரத்துக்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கினீர்களே?
`உங்களுடன் ஸ்டாலின்’ – சதுரங்க வேட்டை
தற்போது, உங்களுடன் ஸ்டாலின் என்று மக்களிடம் மனு வாங்கிக் கொண்டுள்ளீர்களே? இந்த மனுக்களின் நிலைமை என்ன ஆனது? இந்த மனுக்கள் எல்லாம் பலகாரக் கடையில் பொட்டலம் கட்டுவதற்குத்தான் தற்போது பயன்படுகிறது.
மக்களிடம் மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றுவதற்கு ஒரு அரசு தேவைதானா? சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. இதற்கெல்லாம் 2026-இல் மக்களே திமுகவுக்கு முடிவு கட்டுவார்கள்” என்றார்.