• September 11, 2025
  • NewsEditor
  • 0

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற ஏதுவாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி பெண்கள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பணியாற்ற முடியும். இதற்காக ஏற்கனவே உள்ள சட்டத்தில் மொத்தம் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் படி பெண்கள் தகுந்த பாதுகாப்புடன் இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரை பணியாற்றலாம். இது தவிர தொழிற்சாலைகளின் பணி நேரமும் 9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு தொழிற்சாலைகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 125 மணி நேரம் ஓவர்டைம் பணி கொடுக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வெறும் 3 நாட்கள் மட்டுமே நடந்த சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடரின் இறுதி நாளில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரஜபுத் இதனை தாக்கல் செய்து பேசுகையில்,” மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் அதிகபட்சம் 48 மணிநேரம் பணியாற்றவேண்டும். இதன் மூலம் ஒருவர் 4 நாட்கள் தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்றினால் அடுத்த 3 நாட்களை சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டத்திருத்தம் நிரந்தரம் கிடையாது. எந்த நேரம் வேண்டுமானாலும் அரசு இதனை திரும்ப பெற்றுக்கொள்ளும்” என்று தெரிவித்தார். இம்மசோதா உடனே நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மகாராஷ்டிராவிலும் பணி நேரத்தை அதிகரித்து மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *