
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காத நிலையில் அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
இன்று (செப்டம்பர் 11) தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்குப் பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
பாமக தலைமைக்குக் கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்குத் தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி. பாமகவைச் சேர்ந்த யாரும் அன்புமணியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
“நாம் ஒரு பயிரிட்டால் கண்டிப்பாக களை முளைக்கத்தான் செய்யும். ஆனால் களை முளைக்குமே என்று யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. தற்போது களையை நீக்கிவிட்டோம். வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்.
தேவைப்பட்டால் அவர் தனிக் கட்சியைத் தொடங்கலாம். ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது. என்னோடு 40 முறை பேசியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதெல்லாம் பொய்.

என் பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது. இனிஷியலை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த 16 குற்றச்சாட்டுகளில் என்னை உளவுபார்த்த குற்றச்சாட்டும் ஒன்று. அதுதான் நான் மிகவும் மனது வருந்திய குற்றச்சாட்டு. இந்த இடத்தில் வேவுபார்ப்பதற்கு என்ன இருக்கிறது.
நான் திண்டிவனத்தில் வசிக்கும்போது வீட்டின் வெளியே நின்று கொண்டு என்னை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கட்சிக்காரர்கள் கோஷம் போடுவார்கள். இன்றைக்கு அந்த இரும்பே உருகிவிட்டது. 46 ஆண்டுக் காலம் அரும்பாடுபட்டு வளர்த்த இந்தக் கட்சி இவரால் அழிகிறது என்பதை மனம் பொறுக்கவில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
கூட்டத்தில் மைக் வைக்கக்கூடாது, 200 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார். இதுவும் அந்த 16 குற்றச்சாட்டுகளில் ஒன்று. என் உயிர் மூச்சு உள்ள வரை இந்த மக்களுக்காக கோல் ஊன்றியாவது நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன். செயல் தலைவர் பதவியை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று விரைவில் முடிவு செய்வேன்” என்று மனம் வருந்திப் பேசியிருக்கிறார்.