
புதுடெல்லி: நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த 240 பேரை அங்கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் அழைத்துவர ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேபாளத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களில் சிலர் அமராவதியில் உள்ள ஆந்திர அதிகாரிகளை தொடர்புகொண்டு தங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில கல்வித்துறை அமைச்சருமான லோகேஷ், உடனடியாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அமராவதியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேசினார்.