
நடிகர் விஷால் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் விஷால் அறிமுகமான முதல் படம் செல்லமே.
2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக ரீமா சென்னும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பரத்தும் நடித்திருந்தனர்.
படமும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படம் செப்டம்பர் 10, 2004 அன்று வெளியானது.
நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து 21 வருடங்கள் நிறைவடைவதையொட்டி தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “கடந்த 21 வருடமாக நான் மட்டுமல்ல என் குடும்பமும் மூன்று வேளை சாப்பிடும் நிம்மதியான உணவுக்கும், நானும் பலருக்கு உணவளிப்பதற்குமான உறுதி கொடுத்தது ரசிகர்களாகிய நீங்கள்தான்.
உங்களின் அன்பும் ஆதரவும் நம்பிக்கையும் தான் என்னுடைய திரைவாழ்க்கையில் 21 வருடத்தை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறேன்.
நான் நடித்த முதல் படம் செல்லமே வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் முடிந்திருக்கிறது. என் 31-வது படமாக மகுடம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
உதவி இயக்குநராக திரையுலகுக்கு வந்த என் பாதையை மாற்றிய என் குருநாதர் அர்ஜுன், ஃபாதர் ராஜநாயகம் என பலரும் ஊக்கப்படுத்தினார்கள்.
அதன்பிறகுதான் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பைக் கற்றேன். நன்றி என்ற ஒரு வார்த்தையில் என்னால் கடந்துவிட முடியாது.

என் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், விநியோகஸ்தர்கள், என்னுடன் நடித்த சக நடிகர்கள் என எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இதைத் தாண்டி நாம் எப்போதும் சொல்லும் கடவுளின் குழந்தைகளான என் ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.
பல சவாலான சூழல்களையும் கடந்து வருவதற்கு உங்களின் அன்பும், ஆதரவும், உங்களின் குரலும்தான் காரணம். முதல் படம் முதல் இப்போதுவரை விஷால் படம் என எனக்கான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.
அதுதான் என்னை சோர்வடையாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க உத்வேகம் கொடுக்கிறது. எனவே என் உணவுக்கு வழி காண்பித்த ரசிக தெய்வங்களுக்கு நன்றி.
இந்தப் பயணம் என்னுடைய வெற்றி அல்ல நம்முடைய வெற்றி. உங்கள் பணத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வில், கடந்த 12 வருடங்களாக என் அம்மா தேவி அறக்கட்டளை வழியே பலருக்கும் கல்வி, உணவு என உதவி வருகிறோம்.
இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. உதவி பெறுபவர்கள் பெரியளவில் சாதித்து நிற்கும்போதுதான் மனம் நிறைவாக இருக்கும்.
நான் திசை மாறிப் போகும்பொழுது சரியாக வழிகாட்டிய பத்திரிகையாளர்களான என் ஆசிரியர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…