
அண்டை நாடான நேபாளத்தில், இளைஞர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், நீதிமன்றம், பிரதமர் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது, தனியார் சொத்துகள் கலகக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
நேபாளம் நாட்டில் கம்யூனிச கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் ஊழல் செய்து சுகபோக வாழ்க்கை வாழ்வதும், வாரிசு அரசியலும் சமூக ஊடக முடக்கம் தூண்டிய போராட்டத்தின் பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது அரசியலமைப்பில் மாற்றம், பொருளாதார கொள்கைகளில் மாற்றம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகளை, போராடும் இளைஞர்கள் முன்வைக்கின்றனர்.
இந்த சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமைக் குழு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
CPI (M) அறிக்கை:
“இளைஞர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பே காரணம்”
நேபாளில் நடந்துவரும் இளம் தலைமுறையினர் போராட்டங்களில் 20 பேர் பலியாகியிருப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது.
இந்த போராட்டங்கள் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உருவாகியுள்ள பரவலான கோபத்தை பிரதிபலிக்கின்றன.
தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அவர்களின் உண்மையான பிரச்னைகளை தீர்ப்பதிலும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்ததே இதற்குக் காரணம்.
“கும்பல் வன்முறை கண்டிக்கத்தக்கது”
ஆளும் வட்டாரங்களில் பரவலாக நிலவும் ஊழல், அதிகரித்து வரும் வேலையின்மை, பெரும்பான்மையாக இளைஞர்களாக இருக்கும் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் இல்லாமை ஆகிய பிரச்னைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு வெடித்த இளம் தலைமுறையினரின் போராட்டங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் அடங்கியுள்ளன.
கே.பி. ஒலி அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமைதியையும் இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னணி அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நடந்திருக்கும் கும்பல் வன்முறையின் பின்னணியில் இது மிகவும் அவசியமாகும். குறிப்பாக முன்னாள் பிரதமர் ஜலனாத் கானாலின் மனைவி ராஜ்ய லட்சுமி சித்ராகர் கொலை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக்கொள்ளாமல்…
நேபாள இளைஞர்களின் குறைகள் உடனடியாக கேட்கப்பட வேண்டும், அவற்றை தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், முடியாட்சிக்கு எதிரான நீண்ட, கடுமையான போராட்டத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற மதிப்புகளை பாதுகாக்க கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நேபாளின் இளைஞர்களும் ஜனநாயக சக்திகளும், இப்போதைய சூழல் மன்னராட்சி ஆதரவாளர்களாலும், பிற பிற்போக்கு சக்திகளால் பயன்படுத்திக் கொள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த வெகுஜன போராட்டங்களின் விளைவாக, ஜனநாயக மறுமலர்ச்சியாக அமைய வேண்டும், நிலப்பிரபுத்துவ சர்வாதிகார ஆட்சிக்குள் மீண்டும் திரும்புவதாக அமையக் கூடாது.