• September 10, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் சென்ற கைக்குழந்தை உடல் இன்னும் கிடைக்கவில்லை. அந்த சிறுவன் சாப்பிட்ட பாப்கார்ன் அவனது வாயுக்குள் அப்படியே இருந்தது. அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி கூட கழண்டு விழவில்லை. இரண்டு பெண்கள், 5 வயது சிறுவன் உடல்கள் கரையில் கிடத்தப்பட்டிருந்ததை கண்டவர்களின் நெஞ்சு பதைபதைத்து.

தற்கொலை

அந்த சிறுவன் பாப்கார்ன் சாப்பிட்ட படி ஓடினான், அவன் அம்மா பின்னால் ஓடி சென்று கட்டியணைத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்து விட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் பிரச்னை, என்ன இருந்தாலும் எதிர் கொண்டு வாழ்ந்திருக்கலாம் என ஆற்றாமையை அடக்க முடியால் பலரும் கண்ணீருடன் புலம்பினார்கள். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், யார் என்கிற எந்த விபரமும் தெரியவில்லை.

இது குறித்து தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சாவூர் பொட்டுவாச்சாவடி ரோடு, யாகப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள்கள் ராஜேஸ்வரி (30), துர்கா தேவி (28). ராஜேஸ்வரியின் மகன் ஹரிஷ் (6) இவரது கணவர் விஜயராகவன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். காதல் திருமணம் செய்து கொண்ட துர்காதேவிக்கு பத்து நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. மகள்கள் அப்பா தங்கராஜிடன் வசித்துள்ளனர். துர்காதேவிக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால் சகோதரிகள் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். நமக்கு மட்டும் ஏன் நல்ல வாழ்க்கை அமையலை, நாம் ஏன் வாழணும் என புலம்பி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விரக்தியும் மன உளைச்சலும் அதிகமாக குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளனர். அப்பா வெளியே சென்றதும், வெளியூருக்கு செல்வது போல் கிளம்பி வந்தவர்கள் ஆற்றில் குதித்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *