• September 10, 2025
  • NewsEditor
  • 0

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்ததில் தொடங்கி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கூட்டணிக் கட்சிகளை நயினார் நாகேந்திரன் சரியாக அரவணைக்கவில்லை’ என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் வரையில், கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க-வின் தலைவரான நயினார் நாகேந்திரன்.

இந்தச் சூழலில்தான், துணை ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவுக்காக, டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் நயினார். டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும் அவர் விவாதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்

“அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என நினைக்கிறீர்களா?”

“என்ன மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்..?” என்று, அவருக்கு நெருக்கமான பா.ஜ.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “வழக்கமாக, டெல்லி பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்க தமிழகத்திலிருந்து யார் சென்றாலும், மாநிலத் தலைவரின் ஒப்புதலோடுதான் சந்திப்புகள் நடைபெறும். ஆனால், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்திக்கவிருக்கும் தகவலே நயினாருக்கு தெரியாது. கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, ஹரித்துவாருக்குச் செல்வதாக கூறிச்சென்ற செங்கோட்டையனுக்கு, இரவு 7:45 மணிக்கு அமித் ஷாவின் அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட அரை மணிநேரத்திற்கு அமித் ஷாவும் செங்கோட்டையனும் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்திருக்கிறார்கள். பார்லிமெண்ட் ஹவுஸில் நடந்த அந்த சந்திப்பில், பிரிந்து சென்றவர்களை அ.தி.மு.க-வுக்குள் இணைப்பது குறித்தும் பேசியிருக்கிறார்கள். அவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் இருந்துள்ளார்.

இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ள நிலையில், அதுகுறித்து நயினாருக்கு எந்தத் தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. இரவு 9:30 மணிக்கு லேசாக தகவல் கசியத் தொடங்கிய பின்னர்தான், சில டெல்லி நண்பர்கள் மூலமாக சந்திப்பு நடந்திருப்பதையே நயினார் தெரிந்துகொண்டாராம். அப்போதுகூட, டெல்லி பா.ஜ.க தலைவர்களிடமிருந்து எந்த தகவலும் பகிரப்படவில்லை.

அ.தி.மு.க தலைவர்களிடமிருந்து தொடர்ச்சியாக நயினாருக்கு ஃபோன் கால்கள் வந்தன. ‘கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையனை நாங்கள் நீக்கியிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, அவருக்கு எப்படி அமித் ஷா அப்பாயின்மென்ட் கொடுக்கலாம்… அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என டெல்லி நினைக்கிறதா…’ என அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர் கோபதாபமாக பேசவும், எந்த பதிலும் சொல்ல முடியாமல் தவித்துப் போய்விட்டார் நயினார் நாகேந்திரன்.

அமித் ஷா, நயினார் நாகேந்திரன்

“அவரைச் சந்திப்பதாக என்னிடம் சொன்னீர்களா…”

ஏற்கெனவே, ‘தேசிய ஜனநாயக் கூட்டணியை நயினார் சரியாக அரவணைக்கவில்லை’ என்று கொளுத்திப்போட்டு, அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதற்கும், நயினார்தான் காரணமென குற்றஞ்சாட்டியிருக்கிறார் தினகரன். இந்தச் சூழலில், செங்கோட்டையன் உருவத்தில் மற்றொரு நெருக்கடி நயினாருக்கு உருவாகியிருக்கிறது.

டெல்லியிலிருந்து கோவைக்கு வந்த செங்கோட்டையன், தான் அமித் ஷாவைப் பார்த்ததையும் அவருடன் அ.தி.மு.க உள்விவகாரம் குறித்துப் பேசியதையும் போட்டு உடைத்துவிட்டார். இதை, அ.தி.மு.க., பா.ஜ.க சீனியர்கள் பலருமே எதிர்பார்க்கவில்லை. அ.தி.மு.க மேலிடம் உச்சபட்ச டென்ஷனாகிவிட்டது.

அ.தி.மு.க-வின் கோபத்தை ரொம்பவே லேட்டாக புரிந்துகொண்ட டெல்லி பா.ஜ.க சீனியர்கள் சிலர், அக்கட்சியின் மேலிடத்துடன் பேசச் சொல்லி நயினாரைக் கேட்டுக்கொண்டனர். டென்ஷனான நயினார், ‘செங்கோட்டையனை சந்திக்கப் போவதாக என்னிடம் சொன்னீர்களா… அதை முன்கூட்டியே சொல்லியிருந்தால், தமிழ்நாடு அரசியல் சூழலை நான் விளக்கியிருப்பேனே… எல்லாம் முடிந்தபிறகு, சேதாரத்தை சரிசெய்யச் சொல்கிறீர்களே…’ என்று வெடித்துவிட்டார்.

டெல்லியில் இருந்து மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படவும், அ.தி.மு.க தலைமையிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்தார் நயினார் நாகேந்திரன். ஆனால், அந்த விளக்கத்தை பெரிதாக நம்பவில்லை அ.தி.மு.க மேலிடம். இதெல்லாம்தான், நயினாரை ஏகத்திற்கும் டென்ஷனாக்கி இருக்கிறது. வரும் செப்டம்பர் 12-ம் தேதி, துணை ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், அமித் ஷாவிடமே மனம்விட்டு சில விஷயங்களை பேசிவிட தீர்மானித்திருக்கிறார்” என்றனர் விரிவாக.

அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

“ராஜினாமா முடிவில் நயினார் நாகேந்திரன்?”

தனக்கு ஒரு பெரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், 2017-ல் பா.ஜ.க-வில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். நீண்ட காத்திருப்புக்கு பின்னர்தான், அவருக்கு மாநிலத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பொறுப்பை அவர் ஏற்றதிலிருந்தே, கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக சிலர் சதிவலை பின்னியதாகச் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலர், “கட்சியின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தொடர்வதை, கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் பலருக்கும் விருப்பமில்லை. நயினாரின் அரசியல் கருத்துகளுக்கு எதிராக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர், சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். ‘நயினரைவிட அண்ணாமலைதான் கூட்டணியை சரியாகக் கையாண்டார்’ என்று தினகரன் சொல்லியிருப்பதில் இருந்தே, தினகரனை தூண்டிவிட்டது யார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது.

இவ்வளவு சிக்கலான சூழலில், டெல்லியில் இருந்தும் ஒத்துழைப்பு ஏதும் நயினாருக்கு அளிக்கப்படுவதில்லை. நயினாரை மாநிலத் தலைவர் பொறுப்பில் அமித் ஷா அமர்த்தியபோதே, ‘அ.தி.மு.க-வுடன் சுமூகமான உறவை பேணுவதுதான் உங்கள் வேலை. அதில் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது’ என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தார் அமித் ஷா. இன்று, அதே அமித் ஷாவால் கூட்டணிக்குள் ஒரு சலசலப்பு உருவாகிவிட்டது.

அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

அதனால், சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்கு செல்லுமிடத்தில், ‘என் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துவிடுகிறேன். உங்களுக்கு தோதான ஒரு நபரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்…’ என்று அமித் ஷாவிடமே சொல்லிவிட தீர்மானித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். தவிர, தினகரன் பிரச்னையில் தொடங்கி, அண்ணாமலை வகையறாக்கள் கொடுக்கும் குடைச்சல்கள் குறித்தும் அமிஷ் ஷாவிடம் பேசவிருக்கிறார். தலைவர் பதவிக்கு உரிய மரியாதை தரப்படாத நிலையில், அதை சகித்துக்கொண்டு பொறுப்பில் தொடர அவர் தயாராக இல்லை. நயினாரை டெல்லி சமாதானப்படுத்துமா, இல்லை தங்களுடைய இஷ்டப்படி காய்களை நகர்த்துமா என்பதெல்லாம் இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்” என்கிறார்கள்.

‘கட்சியின் மாநிலத் தலைவர் நான். அந்த மரியாதை எனக்கு தரப்படவில்லை…’ என்ற வருத்தத்தில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன். வரும் செப்டம்பர் 13, 14-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பூத் கமிட்டி தொடர்பாக பயிலரங்கம் நடைபெறவுள்ளது. மனவருத்தத்தில், அதில்கூட பெரிதாக ஆர்வம் காட்டவில்லை நயினார் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். ஏதோவொரு கணக்கில், புது கூட்டல் கழித்தல்களை போடத் தொடங்கியிருக்கிறது டெல்லி. அதுபுரியாமல் தடுமாறிப்போயிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதேநிலை தொடர்ந்தால், அதிரடியாக அவர் முடிவெடுத்தாலும் ஆச்சர்யமில்லை!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *