
மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து பணியில் இருந்த கடற்படை ஊழியரிடமிருந்து துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நேவி நகரில் உள்ள கடற்படை தளத்தின் பிரதான வாயில் வழியாக முகக்கவசம் அணிந்த நபர் ஒருவர் பேக் அணிந்து கொண்டு உள்ளே வந்தார். அவர் தன்னிடம் இருந்த அடையாள அட்டையைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.
பேக்கில் சீருடை இருப்பதாக கூறி, உள்ளே சென்ற நபர் மூன்று மணி நேரம் உள்ளேயே சுற்றி இருக்கிறார். அதோடு அங்கு பணியில் இருந்த கடற்படை வீரர் ஒருவரிடம் சென்று, தான் உயர் அதிகாரி என்று பேச்சுக்கொடுத்துள்ளார்.
அதோடு உன்னை பணியில் இருந்து மாற்றிவிடுவதற்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பி, பணியில் இருந்த கடற்படை வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மர்ம நபரிடம் கொடுத்துவிட்டு விடுதிக்கு சென்றுவிட்டார்.
ஆனால் ஒரு மணி நேரம் கழித்து மர்ம நபரை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இது குறித்து தெரிய வந்தவுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் கடற்படை தளத்திற்குள் நுழைந்த மர்ம நபர் உள்ளே வந்து பணியில் இருந்த நபரிடம் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு தன்னிடம் இருந்த சீருடையை அணிந்து கொண்டார்.
அதன் பிறகு அருகில் இருந்த சுவருக்கு அருகில் சென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியை சுவர் வழியாக வெளியில் தூக்கிப்போட்டார்.
தீவிரவாத தடுப்புப் படை விசாரணை
பின்னர் மெயின் கேட் வழியாக சர்வசாதாரணமாக வெளியில் நடந்து சென்றுவிட்டார். அந்த நபர் தூக்கி வெளியில் போட்ட துப்பாக்கியை வெளியில் நின்ற அவரது கூட்டாளி எடுத்துச்சென்றாரா அல்லது கடற்படை வீரர் என்று சொல்லிக்கொண்டு வந்த நபரே சென்று எடுத்துச்சென்றாரா என்பது குறித்து மாநில தீவிரவாத தடுப்புப் படையும் விசாரித்து வருகிறது.
முன்பின் அறிமுகம் இல்லாத நபரிடம் பணியில் இருந்த கடற்படை வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொடுத்தது தொடர்பாக அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதங்களை ஒப்படைக்க சில நடைமுறைகள் இருக்கின்றன.

அந்த நடைமுறையைப் பின்பற்றாமல் ஆயுதத்தை வேறு ஒருவரிடம் கொடுத்த கடற்படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
துப்பாக்கியை மர்ம நபரிடம் பறிகொடுத்த கடற்படை வீரர் அலோக் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருந்தார்.
அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்த அவர் ஒடிசாவில் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் கடற்படை தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.