
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செப்டம்பர் 8, 2025 அன்று, ஜெருசலமின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரமோட் சந்திப்பு (Ramot Junction) என்ற இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 7 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக இஸ்ரேல் நேற்று (9-ம் தேதி) காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர்கள் குறிவைத்து வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
ட்ரம்ப் அதிருப்தி:
இந்த தாக்குதல் நடந்தபோது வாஷிங்டனில் ஒரு உணவகத்துக்கு வந்த ட்ரம்ப், “கத்தார் மீது நடந்த தாக்குதலால் நான் மகிழ்ச்சியடையவில்லை. இது நல்ல சூழ்நிலை இல்லை.
எங்களுக்கு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இந்தத் தாக்குதல் நடந்த விதம் சரியில்லை.
ஹமாஸை அழிப்பது மதிப்புமிக்க இலக்கு. ஆனால், கத்தாரில் இந்தத் தாக்குதல் நடந்தது குறித்து வருத்தமாக உள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்கு சற்று முன் என்னை எச்சரித்தது. எனது தூதர் ஸ்டீவ் விட்காஃப்-ஐ கத்தாருக்கு எச்சரிக்கை செய்யவும் வலியுறுத்தினேன்” என்றார்.
கத்தாரின் கண்டனம்
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் ஆல்-தானி, “இந்தத் தாக்குதல் துரோகம் மட்டுமல்லாமல் அரச பயங்கரவாதம்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யும் கத்தாருக்கு இது பெரிய பின்னடைவு.
இந்தத் தாக்குதலுக்கு கத்தார் பதிலடி கொடுக்கும் உரிமை உள்ளது. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
இந்தத் தாக்குதலில் கத்தாரின் உள்நாட்டு பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
தாக்குதலுக்கு முன்பு எங்களுக்கு அமெரிக்காவிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை. தாக்குதல் தொடங்கிய பிறகே அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்தது. இனி இப்படிப்பட்ட தாக்குதல் கத்தார் மண்ணில் நடக்காது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்திருக்கிறார்” என்றார்.
ஹமாஸின் பதில்
இந்த தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் அமைப்பு தரப்பிலிருந்து, “இந்தத் தாக்குதலில் ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் முக்கிய தலைவர்கள் ஆபத்தில்லாமல் உயிர் தப்பியுள்ளனர்.
ஹமாஸின் முக்கிய பேச்சுவார்த்தையாளரான கலீல் அல்-ஹய்யாவின் மகனும் இதில் உயிரிழந்தார். இஸ்ரேல், எங்கள் பேச்சுவார்த்தைக் குழுவை அழிக்க முயன்றது. ஆனால் அதில் தோல்வியடைந்திருக்கிறது.” என்றார்.
சர்வதேச கண்டனங்கள்
இந்தத் தாக்குதலை எதிர்த்து சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ‘இது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “கத்தாரின் இறையாண்மையை மீறி, பேச்சுவார்த்தை முயற்சிகளை அழிக்கும் செயல்” எனத் தெரிவித்திருக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு
கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்து வருகின்றன. ஆனால், இந்தத் தாக்குதல், காஸாவில் கடந்த இரு ஆண்டுகளாக நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்குப் பெரிய தடையாக மாறியிருக்கிறது.