
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனால், மாநிலங்களவை சபாநாயகரான குடியரசுத் துணைத் தலைவர் இல்லாமலேயே மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது.
அதே நேரத்தில், காலியாக இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தங்களின் வேட்பாளராக அறிவித்தது.
மறுபக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை தங்களின் வேட்பாளராக அறிவித்தது.
நேற்று ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. மொத்தம் 767 எம்.பி.க்கள் வாக்களித்ததாகவும், இதில் 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 15 வாக்குகள் செல்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்
வாக்குப்பதிவு முடிந்தவுடன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,
“எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். 315 எம்.பி.க்களும் வாக்களிக்க வந்துள்ளனர். இது வரலாற்றிலேயே 100% வாக்குப்பதிவு” எனப் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
இந்த தோல்வி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்படி, எதிர்க்கட்சிகள் 315 வாக்குகளைப் பெறும் என கருதினர்.
சக்திசிங் கோஹில்
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்கு எண்ணும் முகவர்களான சக்திசிங் கோஹில்,
“துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றன. அதன் செயல்பாடு உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கது
2022 துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
பா.ஜ.க-வின் எண்கணித வெற்றி, உண்மையில் அரசியல் ரீதியிலும் தார்மீக ரீதியிலும் ஒரு தோல்வியே. கொள்கை ரீதியிலானப் போர் சிறிதும் குறையாமல் தொடர்கிறது.
எதிர்க்கட்சிகளின் 315 எம்.பி.க்களும் வாக்களித்ததால், ரெட்டிக்கு வாக்களிக்காதவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிட்டது.
வாக்குப் பதிவுக்குப் பிறகு நடந்த கணக்கீடுகள் மேலும் சிக்கலானவை. ஏனெனில், சரியாக 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இந்த 15 செல்லாத வாக்குகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்குக் குறைந்த 15 வாக்குகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

“எங்கள் கூட்டணியின் 315 உறுப்பினர்களும் வாக்களிக்க வந்தது, எதிர்க்கட்சிக் கூட்டணி வளர்ந்து வருகிறது, ஒன்றுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. நாட்டின் நலனுக்காக இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கம் தாக்கூர்
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியதாவது:
“ஜஸ்டிஸ் சுதர்சன் ரெட்டி துணைத் தலைவர் தேர்தலில் 300 வாக்குகள் (40%) பெற்றார். நாங்கள் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து ஒற்றுமையாக நின்று போராடுவோம்.
என்.டி.ஏ-வுக்கு வெளியே உள்ள ஜெகன், பி.ஜே.டி மற்றும் பி.ஆர்.எஸ். போன்ற கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக சித்தாந்தத்தை விட்டு வெளிப்படையாக தோல்வியடைந்திருக்கின்றன” என்று தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…