
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.
2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா வெறும் 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
அதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் சபாநாயகர் என்ற முறையில் நடுநிலைமையாகச் செயல்படாமல் ஆளும் கூட்டணி எம்.பி-க்களுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாகக் குற்றம்சாட்டின.
இத்தகைய சூழலில், கடந்த ஜூலை பிற்பாதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (ஜூலை 21) குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.
இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.
நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டிலிருந்து குடியரசு துணைத் தலைவராகும் மூன்றாவது நபரானார்.

மறுமுனையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
இந்த நிலையில், ராஜினாமாவுக்குப் பிறகு மௌனமாக இருந்த ஜெகதீப் தன்கர் முதல்முறையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அந்த அறிக்கையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த உயரிய பதவிக்கு நீங்கள் வந்தது நமது நாட்டின் பிரதிநிதிகளின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
பொது வாழ்வில் பரந்த அனுபவம் கொண்ட உங்கள் தலைமையின் கீழ், இந்தப் பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும் மகிமையையும் பெறும்” என்று ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டிருக்கிறார்.