
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சத்யன் என்ற பெயர் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி துணுக்கு எங்கு பார்த்தாலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் மேடையில் அநாயச தோரணையுடன் அவர் அந்தப் பாடலை பாடும் விதத்தை பலரும் சிலாகித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதும் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டார் சத்யன்.
ஜென் Z கிட்ஸ் மத்தியில் அதிகமாக புழங்கப்படும் ஒரு சொல் ‘அண்டர்ரேட்டட்’. அதாவது ஒரு பாடலோ படமோ வெளியான சமயத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் போயிருந்தால் அவற்றை ‘அண்டர்ரேட்டட்’ என்று குறிப்பிடுவர். அந்த வகையில் பல அசத்தலாக பாடல்களை பாடியிருந்தும் பலருக்கும் தெரியாமல் உண்மையாகவே ‘அண்டர்ரேட்டட்’ பாடகராக இருந்திருக்கிறார் இந்த சத்யன்.