
சுடச்சுட அருமையான தேநீர்… மணம், சுவை, திடம் இப்படி ஒரு தேநீருக்குத் தேவையான அத்தனை குணங்களும் நிரம்பப்பெற்ற ஒரு தேநீரில், ஆளுக்குக் கொஞ்சம் நீரை ஊற்றினால்…
எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ, அதற்குப் பயன்படாமலே அந்தத் தேநீர் வீணாய்ப் போகும். இன்னொரு கோப்பை தேநீர் தயாரித்துக்கொள்ளலாம்தான். ஆனால், வீணாகப் போனது இனி அருமையான தேநீராக மாறப் போவதில்லை.
இன்றைய ‘ரீல்ஸ் யுகம்’ இப்படித்தான் சில நேரங்களில், சமூகத்துக்குச் சென்று சேர வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை ‘மீம்ஸ்’ ஆக்கியோ, ‘இமிடேட்’ செய்தோ எல்லோரையும் சிரிக்க வைத்து, அந்த முக்கியமான விஷயத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.
இதை அவர்கள் தெரிந்தும் செய்யலாம்; தெரியாமலும் செய்யலாம்; பலன் பெற்றும் செய்யலாம். இது செய்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
சமீபமாக, இப்படித்தான் ஒரு விஷயத்தை நீர்த்துப்போகச் செய்துகொண்டிருக்கின்றனர் சில சமூக வலைத்தள செல்வாக்கு மிக்கவர்கள்.
சமூகம் இவர்கள் கேலி செய்கிற விஷயத்தை சில நொடிகள் ரசிக்கிறது என்பதால், தாங்கள் கேலி செய்வது ‘நிஜமாகவே கேலிக்குரிய கன்டென்ட்தானா’ என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக்கிறது.

அந்த விஷயத்துக்கு வருவோம்.
இந்த விஷயத்தில் தனி மனிதர்களின் பெயர்கள் தேவையற்றவை. ஆனால், அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், அந்த சம்பவங்கள் சமூகத்துக்குத் தருகிற படிப்பினைகளும் தேவையானவை.
அதனால், அவர்களை யாரோ ஓர் ஆண், பெண் என்றே எடுத்துக்கொள்வோம். இருவரும் ஏதோவொரு தருணத்தில் பரஸ்பரம் ஈர்க்கப்பட்டு உடலளவிலும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
அந்த இருவரில் ஒருவருக்கு, இது திருமணம் தாண்டிய உறவு. வேறு ஒரு தருணத்தில், சேர்ந்து வாழ்ந்த இருவரில் ஒருவர் இந்த உறவில் இருந்து வெளியேறிவிடுகிறார்.
இன்னொருவரோ, ‘இந்த நபர் என்னிடம் எப்படியெல்லாம் அன்பாக, ஆசையாகப் பேசியிருக்கிறார் பாருங்கள்’ என்று அது தொடர்பான வீடியோவை வெளியிடுகிறார்.
இந்த இரண்டு பேரில் யார் சரி, யார் தவறு என்பதல்ல இங்கே விஷயம்… உன்னை நம்பியவரை ஏமாற்றலாமா; உறவில் இருக்கையில் ஆசையாக அனுப்பிய வீடியோவை பொதுவெளியில் பகிரலாமா என்பனவற்றைப்பற்றியும் நாம் இங்கே பேசப் போவதில்லை.

‘நாங்கள் உறவில் இருந்ததற்கு இந்த வீடியோவும் சாட்சி’ என ஒருவர் வருத்தமுடன் பகிர்ந்ததை, சிலர் ‘இமிடேட்’ செய்து ரீல்ஸ் ஆக்க, கமெண்ட்டில் பலரும் சிரிப்பு ஸ்மைலியைத் தட்ட ஆரம்பித்தார்கள்.
ஆக, சாட்சியாக வெளியான வீடியோ காமெடி ரீல்ஸ் ஆகிவிட்டது. ஒரு பிரச்னையின் வீரியம் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ அதை திசை திருப்புவது இனிவரும் காலங்களில் அதிகமாகும் என்றே தோன்றுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் அல்லது தான் பாதிக்கப்பட்டதாகக் கருதும் ஒருவர், அதைச் சட்டத்துக்கு முன்னால் கொண்டு செல்லும்போது, மின்னணுப் பதிவுகள் அதற்குப் பெருமளவில் உதவும். அப்படியொரு விஷயத்தைக் கேலி, கிண்டல் செய்து நீர்த்துப்போகச் செய்வது அறிவான செயலாக இருக்க முடியுமா..?
திட்டமிட்டோ அல்லது தங்கள் நகைச்சுவை உணர்வை உலகுக்குத் தெரியப்படுத்தவோ சிலர் ‘இமிடேட்’, ‘மீம்ஸ்’ என ஆரம்பித்தால், இதன் ஆரம்பமும் நோக்கமும் தெரியாமல் மற்றவர்களும் இதையே செய்து லைக்ஸ் வாங்க முயல்வார்கள்.
ஒரு படிப்பினையோ அல்லது ஓர் ஆதாரமோ, இதனால் நெட்டிசன்களின் கமெண்ட்டில் சிக்கிக் காமெடியாகி விடலாம். இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிரித்து முடித்தப் பிறகாவது சிந்திப்போம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…