
ஆசியாவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான நேபாளம் அதன் வரலாற்றில் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றைச் சந்தித்து வருகிறது. இன்று (செப்டம்பர் 9) பிரதமர் கே.பி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் முடக்கம்
சமீபத்தில் நேபாள அரசு சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் வகையில் மசோதா ஒன்றை அமல்படுத்தியது. அந்த மசோதாவின்படி, சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படவிருந்தன. இதற்காக அவை அரசிடம் பதிவுசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டன.
ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் பதிவு செய்யாத நிறுவனங்கள் கடந்த 5ம் தேதி முடக்கப்பட்டன. இதன்படி, பேஸ்புக், யூடியூப், இஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் சேவைகள் நிறுத்தப்பட்டது.
இது வெறும் சமூக வலைதளங்களுக்கு எதிரான நகர்வாக அல்லாமல் மக்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், அரசை விமர்சிக்கும் குரல்களை நசுக்குவதாகவும் பார்க்கப்பட்டது.
போராட்டமாக உருவான அரசு மீதான கோபம்
தற்போது நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறது. ஏற்கெனவே இந்த அரசு மீது மக்களுக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன. நாட்டில் ஊழலும் வாரிசு அரசியலும் மலிந்துவிட்டதாகவும், அரசியல்வாதிகளும் அவர்களது உறவினர்களும் மட்டுமே செழித்து வளருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.
சமூக வலைதளங்களில், அரசியல் தலைவர்களின் வாரிசுகளின் வளமான வாழ்வியலைக் காட்டும் வீடியோக்கள் பரப்பப்பட்டு, இதற்கெல்லாம் ஊழல் செய்து மக்களிடமிருந்து பணம் எடுக்கப்படுகிறது எனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம், அரசுக்கு எதிராக மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி மன்னராட்சி ஆதரவாளர்கள் காத்மண்டுவில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டது. 3 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சமூக வலைதளங்களின் முடக்கம் மாணவர்கள் போராட்டத்தைத் தூண்டியது. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தொடக்கத்தில் அரசு, “ஜென் Z-க்களின் போராட்டத்துக்கு அரசு அடிபணியாது” எனக் கூறுமளவு அலட்சியமாகவே இருந்தது.
Nepal முழுவதும் பரவிய வன்முறை, பிரதமர் ராஜினாமா!
மாணவர் போராட்டத்தை நேபளம் அரசு கையாண்ட விதம் சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியிருக்கிறது. இதுவரையில் 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது அரசு. எனினும் ஊழல் மலிந்த பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராடிவரும் இளைஞர்கள், ஒலியின் வீடு, அமைச்சர்கள் இல்லங்களை சூறையாடி வருகின்றனர்.

குறிப்பாக நாடாளுமன்றத்துக்கும், ஒலியின் பக்தாபூர் இல்லத்துக்கும், காத்மண்டுவில் உள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெக்ஹாக் இல்லத்துக்கும் தீவைத்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது.
நாடுமுழுவதும் பரவியுள்ள கடும் வன்முறைக்கு மத்தியில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய ஒலி, அதன்பிறகு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது கலவரத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோபத்தைக் குறைக்குமா என்பதைப் பொறுத்திருந்து காணவேண்டும்.
நேபாளத்தில் அடுத்ததாக ராணுவ ஆட்சி அமையுமா அல்லது வேறு பிரதமர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா டுடே தளம் கூறுவதன்படி, ராணுவ தளபதி அறிவுறுத்தலின்படியே ஒலி ராஜினாமா செய்ததாகவும், ராணுவம் அதிகாரத்தை ஏற்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அரசியல் சமநிலையின்மை மீண்டும் மன்னராட்சி கோரிக்கையை வலுபடுத்தலாம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.