
நடிகர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதியில் படம் திரைக்கு வருவதால் டப்பிங் மற்றும் நிறைவு கட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன.
தனுஷின் 53வது படமாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மெனென், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘என்ன சுகம்’, ‘என்சாமி தந்தானே..’ என இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது சிங்கிளும் ரெடியாகி வருகிறது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.

திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் இன்பனுக்கு தனுஷும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆக, இந்த இசை வெளியீட்டு விழாவில் இன்பன் உதயநிதியை அறிமுகம் செய்து வைக்கும் விழாவாகவும் எதிர்பார்க்கலாம். சில சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன என்ற பேச்சு உள்ளது.
அதைப் போல, தனுஷ் ‘கொடி’ படம் வெளியான போது, முழு வீச்சில் புரொமோஷனில் இறங்கி அடித்தார். தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தியேட்டர் விசிட் டிரைலர்களை தெறிக்கவிட்டனர். அந்த வகையில் ‘இட்லி கடை’க்காக இப்போது மீண்டும் புரொமோஷனில் கவனம் செலுத்த உள்ளார்.
சென்னையில் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, மதுரை, கோவை மற்றும் ஹைதராபாத்திலும் ப்ரீ ஈவன்ட்கள் சில நடத்தத் திட்டமிட்டு வருகிறார் வருகிறார் தனுஷ். இதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. தனுஷும் சில தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தவிர, இந்தியில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ‘டி-54’ல் நடித்து வருகிறார். இதில் அவருடன் மமிதா பைஜூ, கருணாஸ், ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு எனப் பலர் நடிக்கிறார்கள். ‘வீர தீர சூரன்’ தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

ராமநாதபுரம், தேனி பகுதிகளில் சில ஷெட்யூல்கள் மும்முரமாக நடந்து முடிந்திருக்கின்றன. சென்னையில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தனுஷ், அதைப் போல தென்மாவட்ட ரசிகர்களை ராமநாதபுரத்தில் நடந்த படப்பிடிப்பிற்கு இடையே ஒரு ஞாயிறன்று 500 ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது ‘டி 54’க்கு சின்னதொரு பிரேக் விட்டுள்ளதால், ‘இட்லி கடை’ இசைவெளியிட்டுக்குப் பின் ராமநாதபுரத்திலேயே படப்பிடிப்பு தொடர்கிறது என்றும் தகவல்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…