
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் மூதாதையர்களான ஹெத்தையம்மனையும் ஹிரியோடையாவையும் குல தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.
விதைப்பு, அறுவடை என ஒவ்வொரு நிகழ்விலும் குலதெய்வ வழிபாட்டிலிருந்தே தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழாவை ஒட்டுமொத்த படுகர் சமுதாய மக்களும் காணிக்கை செலுத்தி வழிபாட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள பழைமை வாய்ந்த ஒன்னதலை ஹெத்தையம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழா 25 ஆண்டுக்குப் பிறகு கோலாகலமாக நேற்று நடைபெற்றிருக்கிறது.
சிறப்பு வாய்ந்த இந்தத் தருணம் குறித்துப் பகிர்ந்த ஒன்னதலை கிராம மக்கள், “சக்தி வாய்ந்த ஹெத்தையம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்த தொடர்ந்து, திருக்கோயில் பணிகள் நடைபெற்று வந்தன. புதுப்பிக்கப்பட்ட கோயிலில் குடமுழுக்கு திருவிழா நேற்று காலை காலை தொடங்கி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஹெத்தையம்மன் மற்றும் ஹிரியோடைய்யா கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது. மழை பெருகி வளங்கள் நிறைய மூதாதையர்கள் அருள் கூர வேண்டும் எனக் காணிக்கை செலுத்தப்பட்டது” என்றனர்.