
சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு, பஸ்ஸிற்கு காத்திருப்போம்.
பஸ் வந்ததும் முண்டி அடித்துகொண்டு ஏறுவதில், நம் உடைமைகளின் மீது அவ்வளவு கவனம் செலுத்தமாட்டோம்.
பஸ் ஏறியதும் தான், நம் மொபைல் போன் காணாமல் போயிருப்பதைக் கவனிப்போம்.
‘பஸ் வரும்வரை மொபைல் போனை பயன்படுத்தி கொண்டிருந்தோமே… அது வந்த அவசரத்தில் தான் பாக்கெட்டில் வைத்துவிட்டு கிளம்பினோம். இப்போது எங்கே?’ என்கிற குழப்பம் மேலோங்கிவிடும்.
இடையில் என்ன நடத்திருக்கும் தெரியுமா?
பஸ் ஏறுவதற்கு கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த போது, அந்த திருடனும் நம்முடனே நின்றிருப்பான். நாமும் ஏறும் அவசரத்தில் எதையும் கண்டுகொள்ளமாட்டோம்.
அவன் நியூஸ்பேப்பர், அட்டை, துண்டு ஆகியவற்றை நீட்டுவதுபோல நீட்டி அல்லது பஸ்ஸில் ஏற முண்டி அடிப்பதைப் போல நடித்து, நியூஸ்பேப்பர், அட்டை, துண்டு மறைவில் அலேக்காக பாக்கெட்டில் இருக்கும் செல்போனை ஆட்டையைப் போட்டிருப்பான்.
இது செல்போனுக்கு மட்டுமல்ல… பணம், உடைமைகள் என எதுவாக இருந்தாலும் இதே டெக்னிக் தான். மேலும், இது பஸ் நிலையம் மட்டுமல்ல… ரயில் நிலையம், மார்க்கெட் போன்ற கூட்டம் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் இதே சம்பவம் நடக்கிறது.
நமக்கு ஏன் தெரிவதில்லை?
இவர்கள் ‘நவோனியா’ என்று அழைக்கப்படுகிற தொழிற்முறை திருட்டுக் கும்பல் ஆவார்கள். திருடுவதற்கான மிகத் தெளிவான பயிற்சி மற்றும் பக்கா பிளான் இவர்களிடம் இருக்கும். அதனால், இவர்களை நம்மால் அடையாளம் காணமுடியாது.
நவோனியா கும்பல் பெரும்பாலும் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தத் திருட்டில் ஒருவர் மட்டும் ஈடுபடுவதில்லை.
ஒருவர் திருடுவதற்கு, மற்றொருவர் திருடிய பொருளைக் கைமாற்றுவதற்காக 2–3 பேர் குழுவாக செயல்படுகிறார்கள். சில நேரங்களில், இந்தத் திருட்டில் சிறுவர்களையும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சென்னையில்…
தற்போது இந்தத் திருட்டு சென்னையில் அதிகரித்து வருகிறது. அதனால், கூட்டமான இடங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இவர்கள் பயிற்சி பெற்ற மற்றும் நுணுக்கமான திட்டத்தோடு திருடும் திருடர்கள் என்பதால் இவர்களைக் கண்டறிவது சிரமம் என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
கவனம் மக்களே!