
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில், பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை ஜான்வி கபூர், அமிதாப் பச்சன் உள்பட பல பிரபலங்கள் அடிக்கடி இங்கு தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால், மும்பை பிரபாதேவியில் முக்கிய சாலையோரத்தில், குடியிருப்பு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், இந்தக் கோயிலை மேலும் விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.
பண்டிகை காலங்களில், பக்தர்கள் வரிசை கோயிலுக்கு வெளியே சாலையோரம் வரை நீள்கிறது. அதோடு, கோயில் வளாகத்தில் கழிவறை வசதி கூட இல்லாததால், பக்தர்கள் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து, ஷீரடி சாய்பாபா கோயிலைப் போன்று பக்தர்களுக்கான காத்திருப்பு அறை அமைப்பதற்காக, கோயில் நிர்வாகம் அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
200 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோயிலுக்கு அருகிலுள்ள மூன்று மாடி கொண்ட ராம் மேன்ஷன் கட்டிடத்தையும், சித்திவிநாயக் ஹவுசிங் சொசைட்டி கட்டிடத்தையும் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, கோயில் அறங்காவலர் குழு தலைவர் சதா சர்வான்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கோயிலை ரூ.100 கோடி மதிப்பில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அருகிலுள்ள இரண்டு கட்டிடங்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது” என்றார்.
அந்த இரண்டு கட்டிடங்களையும் விலைக்கு வாங்கினால், அதன் மூலம் 1,800 சதுர மீட்டர் நிலம் கிடைக்கும். அந்த இடத்தில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, பிரசாதலயா, பூஜைக்குச் செல்லும் பக்தர்களுக்கான உடை மாற்றும் அறை, கழிவறைகள் போன்றவை கட்டப்பட உள்ளன.
தற்போது கோயில் அருகில் நிலம் இல்லாததால், ராம் மேன்ஷன் கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பவர்களுக்கு ரூ.100 கோடி வழங்க உள்ளோம். இதற்கு மாநில அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

சித்திவிநாயக் ஹவுசிங் சொசைட்டி கட்டிடம் கோயில் நிலத்தில் அமைந்திருப்பதால், அதனை காலி செய்வது எளிதாக இருக்கும்.
அதோடு, பக்தர்கள் வரும் கார்களை நிறுத்த, கோயிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் பூமிக்கடியில் 450 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து கோயில் பொருளாளர் பவன் குமார் கூறுகையில், “ராம் மேன்ஷன் கட்டிடத்தை விலைக்கு வாங்கும் திட்டம் இறுதி நிலையில் உள்ளது. சித்திவிநாயக் ஹவுசிங் சொசைட்டி கட்டிடத்தில் வசிப்பவர்களுடனும் இதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.
ராம் மேன்ஷன் கட்டிடம் அமைந்த இடத்தில் முன்பு சால் வீடுகள் இருந்தன. அவற்றை இடித்துவிட்டு மூன்று மாடி கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் கட்டிட உரிமையாளர் தற்போது வசித்து வருகிறார்.
மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஜூலை மாதம், சித்திவிநாயக் கோயில் மூன்று கட்டங்களாக அழகுபடுத்தப்படும் என்று அறிவித்தது.